இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து அதை பயன்படுத்துகிற சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறான்.
இல்லாவிட்டால் நாம் செய்கிற அட்டூழியத்திற்கெல்லாம் அவன் அல்லவா பொறுப்பு ஆவான், நாம் இல்லையே.
தாவூத் இப்ராஹிம் சொல்லித்தான் குண்டுவைத்தேன். நானாக வைக்கவில்லை என்று சொல்லி தப்பி விடலாமே.
எனவே கடவுள் நமக்கு அறிவையும், அதை பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறான். எனவேதான் பாபம், புண்ணியம் மனிதனுக்குத் தானே தவிர, விலங்குகளுக்குக் கிடையாது.
இப்படி விளக்காவிட்டால் சாத்தான் என்ற ஒன்று இறைவனை விட சக்தி வாய்ந்தது இருப்பதாகவும், அது இறைவனை மீறி நம்மை நடக்கச் செய்வதாகவும், இறைவனாலேயே இத்தனை கோடி (குறைந்தபக்ஷம்) ஆண்டுகளாக அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் விளக்க வேண்டி வரும்.
மட்டுமன்று குழந்தை பிறக்கும் போதே இறப்பது, நோயுடன், குறையுடன், பல்வேறு குணங்களுடன், ஆண் ஆக, பெண்ணாக, பணக்காரன், ஏழையாக, இந்தியாவில் அரேபியாவில்…என்று இருக்கிற ஏராளமான வேறுபாடுகளைக் கொடுப்பது கடவுளா, சாத்தானா என்றும், கடவுள் என்றால் அவர் ஏன் பாரபக்ஷமாக இருக்கிறார் என்றும்… பலவிதமான திருப்திகரமாக பதிலளிக்க முடியாத கேள்விகள் வரும்.
இறைவனுக்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால் நம் முன் நல்லது, கெட்டது வைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கிற சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது.
நமது பாப, புண்ணியத்திற்கு நாமே தான் காரணம். எனவே நம்மால் அதை சரி செய்யவும் முடியும்.
எல்லாரையும் அரவணைத்துச் செல்லுவதன் மூலம். எல்லாருக்கும் நன்மை நினைப்பதன் மூலம். எல்லாரையும் அவர்களுடைய நிறை, குறைகளுடன் ஏற்றுக்கொள்வதன்மூலம், நாமும் அவர்களைப்போல் தானே என்பது புரிந்தால் நமக்கு உயர்வு மனப்பான்மை வராது . எல்லாரையும் நாம் எது சரியென்று நினைக்கிறோமோ அதைக் கடைபிடிக்க வைக்கவேண்டும் என்ற வெறி வராது. உலகம் அமைதியானதாக இருக்கும். குறைந்த பக்ஷம் மதத்தின் பெயரால் ரத்தம் சிந்தப்படாது.
இதைத்தானே விவேகாநந்தர் சிகாகோவில் முழங்கினார்.
அனைத்திற்கும் காரணகர்த்தா என்பதை இவ்விதம் புரிந்துகொள்ளவேண்டும். உலகம், உயிர்கள், விதிகள், அறிவு, சுதந்திரம் எல்லாவற்றிற்கும் காரணகர்த்தா அவரே. பாப, புண்ணியங்களுக்கு, ஏற்றத்தாழ்வுகளுக்கு நாம், நமது செயல்கள் காரணம்.
Article by: Swami Vedanishthananda Saraswati