ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம் முகப்புத்தகத்தில் ஒரு மிகப்பெரும் புரட்சியை செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 9ம் தேதி ஒரு குழுமமாய் முகப்புத்தகத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், நம் சனாதன தர்மத்தை காப்பதிலும், நம் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகளின் சதிகளை, தமிழக மக்களின் முன் தோலுரித்து போடுவதிலும் மிகப்பெரும் பங்கை ஆற்றிட களம் இறங்கியுள்ளது.
நம்முடைய இயக்கம் கடந்து வந்த பாதை மிகச் சிறியது, ஆனால் செயல் படுத்தியதோ அதிகம். இன்றைய தேதியில் முகப்புத்தகத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரம் உறுப்பினர்களை கொண்ட இந்த இயக்கம், தமிழகம் முழுதும் மதமாற்றத்திற்கு எதிரான மிகப்பெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. நம் இயக்கத்தை சேர்ந்த தர்ம சேவகர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் களம் இறங்கி விழிப்புணர்வு பிரசுரங்களை அனைவருக்கும் வழங்கி வருகின்றனர். உலகம் முழுதும் இருந்து பல தமிழ் அன்பர்கள் தங்களால் இயன்ற நிதி தந்து உதவுகிறார்கள். கிட்டத்தட்ட 50000 க்கும் மேலான துண்டு பிரசுரங்கள் பல்வேறு தர்ம சேவகர்கள் மூலமாக தமிழக முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மதமாற்ற விழிப்புணர்வை மேலும் சிறப்பான முறையில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல அருமையான திட்டங்களை இனி அமல்படுத்த இருக்கிறோம். இது குறித்து பல தகவல்களை நாம் இனி உங்கள் முன் கொண்டு வருவோம்.
புதியதாக தொடங்கப்பட்டுள்ள இந்த வலைமனையின் உதவியோடு நாம் நம் தர்மத்தை குறித்த பல சிறந்த பதிவுகளை இட உள்ளோம். நம் தர்மத்தை கடைகோடி தமிழர்களுக்கும் மிக எளிமையான வழியில் எடுத்து செல்வது நம் நோக்கங்கங்களில் முதல்மையானது. பெருகிவரும் அதர்ம சக்திகள் குறித்த விழிப்புணர்வையும் நாம் இதன் மூலம் அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.
நம் தர்ம நூல்களில் உள்ள மேன்மையான கருத்துக்கள், நம் பாரத தேசத்தின் பெருமை மற்றும் கலாச்சார மேன்மை ஆகியவற்றை இந்த வலை மனை உங்கள் முன் மிகச் சிறப்பாக கொண்டு வந்து சேர்க்கும். குறிப்பாக நம் வேத, உபநிடதங்கள், கீதை மற்றும் புனித நூல்களில் உள்ள விஞ்ஞான பெருமைகளை கடைக் கோடி தமிழர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை முனைப்புடன் இந்த வலைமனை மேற்கொள்ளும்.
சகோதர சகோதரிகளே, இந்த இமாலய பணிக்காக நீங்களும் உங்கள் மேலான பங்கினை ஆற்றுங்கள். நாம் கூடி நின்றால் நம்மை எதிர்க்க யாரால் முடியும்? ஹிந்து ஒற்றுமையை தவிர வேறு எதுவுமே நமக்கு நன்மை தராது அல்லவா?
நாம் இணைந்து செயலாற்றுவோம்.
வாழ்க பாரதம். வந்தே மாதரம்.