ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

ஆன்மா எது?

aanma-ethuநமது சனாதன தர்மத்தின் லட்சியம் இறைநிலையை அடைய வேண்டும். அதற்கான வழியையும் நமது ரிஷிகளும், முனிவர்களும் ஏனைய பெரியோர்களும் வழிவகுத்துள்ளனர். முதலில் இறைலட்சியம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் முதலாவது நான் வேறு இந்த உடம்பு வேறு என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் உடம்பு அனைவருக்கும் தெரியும் நாம் அனுதினமும் அதை பார்த்து பேணிகாக்கிறோம். ’நான்’ எனபது ஆன்மா. ஆன்மா எது அது எங்க இருக்கிறது எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம். இப்பதிவு சாந்தோகிய உபநிஷதில் வருகிறது.

படைப்பு கடவுளாகிய பிரஜாபதி தேவர் தலைவனாகிய இந்திரனுக்கும் அசுரர் தலைவனான் விரோசனனுக்கும் உபதேசித்த வித்தை இது. ஆன்மா எது என்பதை இந்த வித்தை படிப்படியாக விளக்குகிறது. சாதாரண மனிதர்களுக்கு உடம்பே எல்லாம். உடம்பைத் தவிர எதுவும் இருப்பதை அவர்கள் அறிவதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை. எனவே உடம்பை பேணுவதிலும் அலங்கரிப்பதிலும் தங்கள் வாழ்நாளைச் செலவழிக்கின்றனர். இவர்களின் பிரதிநிதியாக உள்ளான் விரோசனன்.

ஆனால் சிலர் சிந்திக்கிறார்கள். இந்த உடம்புதான் எல்லாமா? இதைத் தவிர வேறு எதுவும் இல்லையா? உடம்பின் அழிவுடன் நாமும் அழிந்துவிடுகிறோமா? இத்தகைய கேள்விகளுக்கு விடைகாண முயற்சிக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக உள்ளான் இந்திரன்.

ஒருமுறை பிரஜாபதி கூறுகிறார்:

ஆன்மா பாவமற்றது, மூப்பற்றது, மரணமற்றது, கவலையற்றது, பசி இல்லாதது, தாகம் இல்லாதது, ஆசைகள் நிறைவேறப் பெற்றது, சங்கல்பம் தடைபடாதது. அதனையே தேட வேண்டும், அதனையே அறிய வேண்டும், அந்த ஆன்மாவைத் தேடி அறிந்தவன் எல்லா உலகங்களையும் அடைகிறான்; எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெறுகிறான்.

ஒர் உண்மையைக் கூறுவதுடன் நின்றுவிடுகிறார் பிரஜாபதி. ஆன்மா என்ற ஒன்று உள்ளது; அதை அடைந்தவனுக்கு இவ்வளவு பேறுகள் வாய்க்கின்றன. இதை சொல்வதுடன் நின்றுவிடுகிறார். இந்த ஆன்மா எது என்றோ, யார் என்றோ, எங்கே உள்ளது என்றோ எதுவும் கூறவில்லை. கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அவரது வார்த்தைகள் அமைந்துள்ளன. இதை கேட்டு, ஆர்வம் கொண்டு தம்மை நாடுபவனுக்கு மேலும் உபதேசத்தைத் தொடரலாம் என்பது அவரது எண்ணம். பிரஜாபதியின் உபதேசத்தை தேவர்களும் அசுரர்களும் கேட்டனர்.

நல்லது’. ஆன்மாவைத் தேடினால் எல்லா உலகங்களையும் அடையலாம், எல்லா ஆசைகளும் நிறைவேறும். எனவே ஆன்மாவைத் தேடுவோம் என்று அவர்கள் பேசிக்கொண்டனர். பின்னர் தேவர்களில் இந்திரனும், அசுரர்களில் விரோசனனும் புறப்பட்டனர். ஒருவருக்கொருவர் கலந்து பேசாமலேயே இருவரும் கைகளில் ஸமித்தை ஏந்திக்கொண்டு பிரஜாபதியை அனுகினர்”.

”இந்திரனும் விரோசனனும் முப்பத்திரண்டு வருடங்கள் பிரம்மச்சரியம் காத்தபடி பிரஜாபதியுடன் வாழ்ந்தார்கள். அதன் பிறகு ஒருநாள் பிரஜாபதி அவர்களிடம், நீங்கள் எதற்காக இங்கே தங்குகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆன்மா பாவமற்றது, மூப்பற்றது, மரணமற்றது, கவலையற்றது, பசி இல்லாதது, தாகம் இல்லாதது, ஆசைகள் நிறைவேறப் பெற்றது, சங்கல்பம் தடைபடாதது. அதனையே தேட வேண்டும், அதனையே அறிய வேண்டும், அந்த ஆன்மாவைத் தேடி அறிந்தவன் எல்லா உலகங்களையும் அடைகிறான்; எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெறுகிறான்”. —இந்த வார்த்தைகள் தங்களுடையதாகத்தான் அறியப்படுகின்றன. அந்த ஆன்மாவை அறிவதற்காகத்தான் நாங்கள் இங்கே தங்கியுள்ளோம் என்று பதிலளித்தனர்”.

இதில் பிரஜாபதி இந்திரனையும் விரோசனனையும் பிரம்மசரியம் இருக்கும் படி கூறுகிறார். அதாவது ஆன்மீக வாழ்க்கைக்கு பிரம்மசரியம் இன்றிமையாதது. அதனால்தான் நமது வாழ்க்கைமுறையை கூட நான்கு விதமாக பிரித்தார்கள். பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம். எப்படியானலும் ஒருவன் பிரம்மசரியம் இருந்தே தீரவேண்டும். ஏன் பிரம்மசரியம் இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவதை கேட்போம். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். பிரம்மசரியத்தை உறுதியாக அனுஷ்டிக்கிற ஒரே ஒரு காரணத்தாலேயே எல்லா விதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ச்சி பெற்று விட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறை தான் கேட்டதையும் அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துகொள்கிறான். பிரம்மசரியம் பற்றி இன்னும் சொல்லிகொண்டே போகலாம். இப்படிப்பட்ட பிரம்மசரியம் நம் நாட்டில் இல்லாமற் போனதால்தான் நாடு இந்நிலையில் இருப்பதற்க்கு காரணம். பிரம்மசரியம் பற்றி பின்வரும் நாட்களில் பார்ப்போம். மேலும் பிரஜாபதி தொடர்ந்தார்.

”கண்களில் எது தெரிகிறதோ அதுவே ஆன்மா. அது மரணமற்றது, பயமற்றது. அதுவே இறைவன் என்றார் பிரஜாபதி. அதைக் கேட்ட இந்திரனும் விரோசனனும், ‘ஐயா! தண்ணீரில் தெரிபவர் கண்ணாடியில் தெரிபவர் ஆகிய இருவரில் யார் ஆன்மா?’ என்று கேட்டனர். ‘இந்த அனைத்திலும் தெரிவது ஆன்மாவே’ என்று பதிலளித்தார் பிரஜாபதி”.

பிரஜாபதி வித்தையின் முன்னுரையாக அமைகின்ற இந்தக் கதையின் ஆரம்பித்தில், ஆன்மீக வாழ்க்கை அல்லது தெய்வீக வாழ்க்கையின் என்னென்ன மனமயக்கங்கள் சம்பவிக்கலாம் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

முதலில் ஆன்மாவை அல்லது இறைவனை அறிவதால் வரும் பலன்கள். வெவ்வேறு உலகங்களை அடையலாம், எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெறும் போன்றவற்றை வார்த்தைக்கு வார்த்தை பொருள்கொள்ளக் கூடாது. ஆரம்ப மனங்களுக்கு அது சரி. ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் அதன் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் உலகியல் வாழ்க்கை வாழ்பவர்களை ஆன்மீகத்தை நோக்கித் திருப்புவதற்கு இத்தகைய கவர்ச்சிகரமான சில பலன்கள் கூறப்படுகின்றன. சைதன்ய தேவர் இத்தகைய உத்தியைப் பயன்படுத்தி உலகியல் மக்களையும் இறைநாமம் சொல்ல வைத்ததாக பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்:

‘உலகியல் மனிதர்களிடம், எல்லாவற்றையும் துறந்து விட்டு, இறைவனின் தாமரைத் திருவடிகளை நாடுங்கள் என்று சொன்னால் ஒருபோதும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள். அதனால்தான் சைதன்யர், நித்தியானந்தர் ஆகிய இரண்டு சகோதரர்களும் ஆலோசித்து, அத்தகையோரை இழுக்க ஒரு தந்திரம் செய்தார்கள். ‘மாகூர் மீன் குழம்பு சாப்பிடுங்கள், இளம் பெண்களைத் தழுவுங்கள், ஹரி நாமத்தைச் சொல்லுங்கள்’ என்று அவர்கள் கூவினார்கள். முதல் இரண்டின் ஆசையினால் பலர் ஹரினாம சங்கீர்த்தனத்தில் பங்கு கொண்டனர். ஹரி நாம அமுதத்தில் சிறிது ஆனந்தம் பெற்றதும், ’மாகூர் மீன் குழம்பு’ என்பது ஹரிப்பிரேமையினால் ஏற்படக் கூடிய ஆனந்தக் கண்ணீர் என்றும், ‘இளம்பெண்களைத் தழுவுதல்’ என்பது ஹரிப் பிரேமையால் பூமியில் புரள்வது என்றும் தெரிந்து கொண்டனர்.

இந்திரன், விரோசனன் இருவருமே பிரஜாபதியின் இத்தகைய கவர்ச்சிகரமான மொழிகளால் கவரப்பட்டே அவரை அணுகினர். கண்ணில் தெரிபவரே ஆன்மா என்றார் பிரஜாபதி. கண்ணாடியில் பார்த்தாலோ அதிலும் உருவம் தெரிகிறது, அதில் தெரிகின்ற கண்ணிலும் உருவம் தெரிகிறது. இந்த இரண்டில் யார் ஆன்மா? என்பது சந்தேகம். ஆன்மா என்றதுமே உடம்பைத்தான் இருவரும் புரிந்துகொண்டனர். இது அரைகுறையான அறிவு. உடம்பும் ஆன்மாதான் ஆனால் உடம்பு மட்டுமே ஆன்மா அல்ல. இதைத்தான் பிரஜாபதி அவர்களிடம் தெரிவித்தார். கண்ணிலும், கண்ணாடியிலும் அனைத்திலும் தெரிவது ஆன்மாவே, என்று அவர் கூறினார்.

நீங்கள் அறிந்தது தவறு என்று ஆரம்பத்திலேயே கூறினால் அவர்களின் ஆர்வமும் முயற்சியும் வேகமும் தடைப்படும். எனவே அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பதில் அளித்தார் பிரஜாபதி. மற்றொரு முக்கியமான கருத்து இங்கே கூறப்படுகிறது. இந்திரன், விரோசனன் இருவருமே மன்னர்கள் சுகபோகங்களில் வாழ்பவர்கள். ஆனால் உண்மையை அறிவதற்காக ஆன்மீகத்தை நாடும்போது இருவருமே தங்கள் நாட்டையும் சுகபோகங்களையும் துறந்தனர். பணிவுடன் யாகத்திற்கான விறகை ஏந்தி வந்தனர். அனைத்திற்கும் மேலாக முப்பதிரண்டு வருடங்கள் பிரம்மசரிய வாழ்வை வாழ்ந்தனர். இவை அனைத்தும் ஆன்மீக வாழ்வின் அடிப்படைகளாக இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்திரன் , விரோசனன் இருவருமே இந்த உடம்புதான் ஆன்மா என்று நினைத்தனர். இதை புரிந்துகொண்ட பிரஜாபதி அவர்களுக்கு இன்னும் சிறிது விளக்கினார்.

‘இந்திரன், விரோசனன் ஆகிய இருவரையும் பார்த்து பிரஜாபதி, இதோ இந்தப் பாத்திரத்திலுள்ள தண்ணீரில் உங்களைப் பாருங்கள். அதன்பிறகு ஆன்மாவைப்பற்றி எது உங்களுக்குப் புரியவில்லையோ அதை என்னிடம் கேளுங்கள், என்று கூறினார். அவர்கள் இருவரும் சென்று பாத்திரத்திலுள்ள நீரில் தங்களைப் பார்த்தனர். ‘என்ன காண்கிறீர்கள்?’ என்று அவர்களிடம் பிரஜாபதி கேட்டார். ‘ஐயா! தண்ணீரில் தெரிகின்ற பிரதிபிம்பத்தில் முடியிலிருந்து நகம் வரை எங்களை முழுமையாகக் காண்கிறோம்’ என்று இருவரும் பதிலளித்தனர்.

’பின்னர் பிரஜாபதி அவ்ர்களிடம், நீங்கள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து, பகட்டாகச் சென்று அந்த பாத்திரத்திலுள்ள தண்ணீரில் பாருங்கள்’ என்றார். அவர்களும் தங்களை நன்றாக அலங்கரித்துக்கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து பகட்டாகச் சென்று அந்தப் பாத்திரத்திலுள்ள தண்ணீரில் பார்த்தனர். அப்போது பிரஜாபதி, ‘நீங்கள் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

‘போற்றுதற்குரியவரே, நன்றாக அலங்கரித்துக்கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து நாங்கள் எப்படி பகட்டாக இருக்கிறோமோ அப்படியே இந்தப் பாத்திரத்திலுள்ள தண்ணீரிலும் நன்றாக அலங்கரித்துக்கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து பகட்டாக இரண்டு பிரதிபிம்பங்கள் தெரிகின்றன’. ‘அதுவே ஆன்மா. அது மரணமற்றது, பயமற்றது. அதுவே இறைவன்’ என்றார் பிரஜாபதி. அதைக் கேட்ட இந்திரனும் விரோசனனும் திருப்தியுற்றவர்களாகத் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

தாம் கூறியதைக் கேட்டு, தங்கள் இருப்பிடம் திரும்புகின்ற இந்திரனையும், விரோசனனையும் பார்த்த பிரஜாபதி தமக்குள், ‘ஆன்மாவை அடையாமல், ஆன்மாவை அறியாமல் இவர்கள் போகிறார்கள். இத்தகைய கருத்துக் கொண்டிருப்பவர்கள் தேவர்களோ அசுரர்களோ யாராலும் அவர்களுக்கு அது இழப்பே’ என்று கூறிக்கொண்டார்.

விரோசனன் திருப்தியுற்றவனாக அசுரர்களிடம் சென்று, தான் அறிந்ததை அவர்களுக்கு கூறினான்: ‘இதோ, இந்த ஆன்மாவையே (உடம்பையே) வழிபட வேண்டும். இந்த ஆன்மாவிற்கே (உடம்பிற்கே) சேவை செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் இந்த உலகம், மறுவுலகம் ஆகிய இரண்டு உலகங்களையும் அடைவோம்.’

அதனால்தான் தானம் கொடுக்காதவனையும் பிறரை மதிக்காதவையும் வழிபாடுகள் செய்யாதவனையும் இன்றும் மக்கள், ‘ஓ, இவன் அசுரனே’ என்று கூறுகிறார்கள். ஏனெனில் இப்படி வாழ்வது அசுரர்களின் கொள்கை. அவர்கள்தான் இறந்தவனின் உடம்பை அழகான பொருட்களாலும் துணிகளாலும் ஆபரண்ங்களாலும் அணிவிக்கிறார்கள். இதனால் மறுவுலகை அடையலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இறந்தபிறகு உடம்பை அலங்கரித்து, பல்வேறு பொருட்களையும் உடன் வைத்து புதைத்துவிட்டால் அவர்கள் மேலுலகம் சென்றுவிடுவார்கள் என்ற கருத்து பண்டைய எகிப்து, சுமேரியா போன்ற நாடுகளில் நிலவிவந்தது. அதுபோன்ற ஒரு கருத்து இங்கே கூறப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் பயனற்றவை. சரி அசுரர்களின் சிந்தனை இப்படி இருக்க, தேவனின் சிந்தனை அதாவது இந்திரனும் இதே போன்று தான் புரிந்துகொண்டானா? அல்லது அவன் எப்படி புரிந்துகொண்டான் என்பதை இப்போது பார்ப்போம்

அரைகுறையாக அறிந்ததுடன் அசுரன் திருப்தியுற்று நின்றுவிட்டான். தேவனோ சிந்தித்தான். அவன் என்ன சிந்தித்தான் என்பதை இப்போது பார்ப்போம்.

விரோசனனைப் போலவே இருப்பிடம் திரும்பிய இந்திரன் தேவர்களை அடையுமுன்பே ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் சிந்தித்தான்: ‘இந்த உடம்பே ஆன்மா என்று கருதுகிறேன்’ எனவே இந்த உடம்பை நன்றாக அலங்கரித்தால் ஆன்மாவை அலங்கரித்ததாகிறது. உடம்பிற்கு நல்ல உடை அணிந்தால் ஆன்மாவிற்கு நல்ல உடை அணிந்ததாகிறது. உடம்பை பகட்டாக வைத்துக்கொண்டால் ஆன்மாவையும் பகட்டாக வைத்ததாகிறது. அப்படியானால், உடம்பு பார்வையற்றதாகுமானால் ஆன்மாவும் பார்வையற்றதாகும். உடம்பு ஊனமுற்றால் ஆன்மாவும் ஊனமுறும். உடம்பு காயப்பட்டால் ஆன்மாவும் காயப்படும். உடம்பு அழிந்தால் ஆன்மாவும் அழியும். இத்தகைய கருத்தில் நான் எந்தச் சிறப்பையும் காணவில்லை.

ஆன்மாவைப்பற்றி தான் கொண்டிருந்த கருத்து திருப்தியாக இல்லை என்று கண்ட இந்திரன் பிரஜாபதியிடம் திரும்பி வந்தான். அவனைக் கண்ட பிரஜாபதி அவனிடம், ‘இந்திரா, திருப்தியுற்று மனத்தினாய் விரோசனனுடன் நீ உன் இருப்பிடத்திற்குத் திரும்பினாய். இப்போது எதை விரும்பி மீண்டும் வந்துள்ளாய்’ என்று கேட்டார். அதற்கு இந்திரன், இந்த உடம்பை நன்றாக அலங்கரித்தால் ஆன்மாவை அலங்கரித்ததாகிறது. உடம்பிற்கு நல்ல உடை அணிந்தால் ஆன்மாவிற்கு நல்ல உடை அணிந்ததாகிறது. உடம்பை பகட்டாக வைத்துக்கொண்டால் ஆன்மாவையும் பகட்டாக வைத்ததாகிறது. அப்படியானால், உடம்பு பார்வையற்றதாகுமானால் ஆன்மாவும் பார்வையற்றதாகும். உடம்பு ஊனமுற்றால் ஆன்மாவும் ஊனமுறும். உடம்பு காயப்பட்டால் ஆன்மாவும் காயப்படும். உடம்பு அழிந்தால் ஆன்மாவும் அழியும். இத்தகைய கருத்தில் நான் எந்தச் சிறப்பையும் காணவில்லை. என்று பதிலளித்தான்.

இந்திரன் நிலைமையைப் புரிந்துகொண்ட பிரஜாபதி அவனிடம், ‘இந்திரா, நீ கூறியது சரிதான். நீ ஆன்மாவைப் பற்றி சரியாக அறியவில்லை. எனவே மீண்டும் உனக்கு நான் அதனை விளக்குகிறேன். ஆனால் நீ இன்னும் முப்பத்திரண்டு வருடங்கள் இங்கே தங்க வேண்டும்’ என்றார். அதனை ஏற்றுக் கொண்ட இந்திரன் மேலும் முப்பதிரண்டு வருடங்கள் பிரஜாபதியுடன் தங்கினான்.

இங்கே முக்கியமான ஒன்று சொல்லப்படுகிறது அதாவது பகுத்தறிதல். இந்திரன் சிந்திக்கிறான். அவன் மனதில் இந்த கேள்விகள் எழுகிறது. இல்லை என்று சொல்வது பகுத்தறிவு கிடையாது. உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று இந்திரனிடம் உள்ள ஆர்வத்தையும் அதற்காக எந்தத் தியாகத்தையும் அவன் செய்ய தயாராக இருக்கிறான். அதுபோலவே நாமும் இறைவனை அடைய வேண்டுமானால் பல தியாகங்களை செய்ய வேண்டும். இந்த உடம்பை ஆன்மாவாகக் கொண்டால் இந்த உடம்பில் நேர்கின்ற குறைபாடுகள் ஆன்மாவிற்கு நேர்ந்ததாகும். எனவே இது சிறப்பான கருத்து அல்ல என்று முடிவு செய்தான். எனவே பிரஜாபதியிடம் திரும்பி வந்தான். அவன் ஆன்ம ஞானத்தின் அடுத்த படியைப் புரிந்துகொள்ளத் தயாராக இருப்பதை உணர்ந்து கொண்ட பிரஜாபதி அவனிடம் மேலும் விளக்க ஆரம்பித்தார்.

பிரஜாபதி கூறினார்:- ‘யார் மகிழ்ச்சியுடன் கனவில் உலவுகிறானோ அவனே ஆன்மா. அவன் மரணமற்றவன், பயமற்றவன்; அவனே இறைவன்.’ இதை கேட்ட இந்திரன் திருப்தியுடன் இருப்பிடம் திரும்பினான். ஆனால் தேவர்களை அடையுமுன்பே அவன் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. ‘உடம்பு பார்வையற்றதாக இருந்தால் கனவுடம்பு பார்வையுற்றதாக இருப்பதில்லை. தூல உடம்பு ஊனமுற்றதாக இருந்தால் கனவுடம்பு ஊனமுற்றதாக இருப்பதில்லை. தூல உடம்பின் குறைபாடுகள் கனவுடம்பில் காணப்படுவதில்லை. தூல உடம்பை வெட்டினால் கனவுடம்பு வெட்டப்படுவதில்லை. தூல உடம்பின் கால் ஊனமானால் கனவுடம்பின் கால் ஊனமாவிதில்லை. ஆனாலும் கனவில் அதைக் கொன்றதுபோல், யாரோ துரத்துவதுபோல், துன்பப்படுவதுபோல் காண்கிறோம். கனவில் அந்த உடம்பு அழுவதைக் கூட காண்கிறோம். இத்தகைய கருத்தில் நான் எந்தச் சிறப்பையும் காணவில்லை’ என்று சிந்தித்தான் இந்திரன்.

ஆன்மாவைப்பற்றி தான் கொண்டிருந்த கருத்து சரியல்ல என்பதை உணர்ந்த இந்திரன் மீண்டும் பிரஜாபதியிடம் திரும்பி வந்தான். அவனைக் கண்ட பிரஜாபதி அவனிடம், ‘இந்திரா, திருப்தியுற்று மனத்தினாய் நீ உன் இருப்பிடத்திற்குத் திரும்பினாய். இப்போது எதை விரும்பி மீண்டும் வந்துள்ளாய்’ என்று கேட்டார்.

அதற்கு இந்திரன், ‘தூல உடம்பை வெட்டினால் கனவுடம்பு வெட்டப்படுவதில்லை. தூல உடம்பு ஊனமானால் கனவுடம்பு ஊனமாவதில்லை. ஆனாலும் கனவில் அதைக் கொன்றதுபோல், யாரோ துரத்துவதுபோல், துன்பப்படுவதுபோல் காண்கிறோம். கனவில் அந்த உடம்பு அழுவதைக் கூட காண்கிறோம். இத்தகைய கருத்தில் நான் எந்தச் சிறப்பையும் காணவில்லை’ என்று பதிலளித்தான். இந்திரன் நிலைமையைப் புரிந்துகொண்ட பிரஜாபதி அவனிடம், ‘இந்திரா, நீ கூறியது சரிதான். நீ ஆன்மாவைப் பற்றி சரியாக அறியவில்லை. எனவே மீண்டும் உனக்கு நான் அதனை விளக்குகிறேன். ஆனால் நீ இன்னும் முப்பத்திரண்டு வருடங்கள் இங்கே தங்க வேண்டும்’ என்றார். அதனை ஏற்றுக் கொண்ட இந்திரன் மேலும் முப்பதிரண்டு வருடங்கள் பிரஜாபதியுடன் தங்கினான்.

விழிப்பு நிலைக்கு அடுத்ததாகக் கனவு நிலை என்ற ஒன்று மனிதனுக்கு உண்டு. விழிப்பு நிலையை அனுபவிப்பது தூல உடம்பு, அதாவது தூல மனிதன். வேதாந்தத் தத்துவம் இவனை ‘விச்வன்’ என்று அழைக்கிறது. இந்த உடம்பு கனவில் செயல்படுவதில்லை. கனவில் நாம் கண்பது வேறு உடம்பு. விழிப்பு நிலையில் கால்களை இழந்திருப்பவன் கனவில் கால்களை பெற்றவனாக இருக்ககூடும். தூல உடம்பின் குறைபாடுகள் கனவு உடம்பைப் பாதிப்பதில்லை. எனவே கனவுடம்பைச் செயல்படுத்துகின்ற கனவு-மனிதன் தான் ஆன்மா என்று போதித்தார் பிரஜாபதி. வேதாந்தத் தத்துவம் கனவு- மனிதனை ‘தைஜஸன்’ என்று அழைக்கிறது

பிரஜாபதி கூறினார்:- ‘யார் முற்றிலும் அமைதியாக கனவும் காணாமல் தூக்கத்தில் ஆழ்ந்துள்ளானோ அவனே ஆன்மா. அவன் மரணமற்றவன், பயமற்றவன்; அவனே இறைவன்.’ இதைக் கேட்ட இந்திரன் திருப்தியுடன் இருப்பிடம் திரும்பினான். ஆனால் அவன் தேவர்களை அடையுமுன்பே ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது: ‘தூக்கத்தில் ஆழ்ந்துள்ளவன் அப்போது, ‘நானே அவன்’ என்று தன்னையோ அல்லது மற்ற உயிரினங்களையோ அறிவதில்லை. அப்போது அவன் அழிந்தே போய்விட்டதுபோல்தான் தோன்றுகிறது. இத்தகைய கருத்தில் நான் எந்த சிறப்பையும் காணவில்லை’ என்று சிந்தித்தான் இந்திரன்.

ஆன்மாவைப்பற்றி தான் கொண்டிருந்த கருத்து சரியல்ல என்பதை உணர்ந்த இந்திரன் மீண்டும் பிரஜாபதியிடம் திரும்பி வந்தான். அவனைக் கண்ட பிரஜாபதி அவனிடம், ‘இந்திரா, திருப்தியுற்று மனத்தினாய் நீ உன் இருப்பிடத்திற்குத் திரும்பினாய். இப்போது எதை விரும்பி மீண்டும் வந்துள்ளாய்’ என்று கேட்டார். அதற்கு இந்திரன், ‘தூக்கத்தில் ஆழ்ந்துள்ளவன் அப்போது, “நானே அவன்” என்று தன்னையோ அல்லது மற்ற உயிரினங்களையோ அறிவதில்லை. அப்போது அவன் அழிந்தே போய்விட்டதுபோல்தான் தோன்றுகிறது. இத்தகைய கருத்தில் நான் எந்த சிறப்பையும் காணவில்லை’ என்றான்.

இந்திரன் நிலைமையைப் புரிந்துகொண்ட பிரஜாபதி அவனிடம், ‘இந்திரா, நீ கூறியது சரிதான். நீ ஆன்மாவைப் பற்றி சரியாக அறியவில்லை. எனவே மீண்டும் உனக்கு நான் அதனை விளக்குகிறேன். ஆனால் நீ இன்னும் ஐந்து வருடங்கள் இங்கே தங்க வேண்டும் என்றார். அதனை ஏற்றுக்கொண்ட இந்திரன் மேலும் ஐந்து வருடங்கள் பிரஜாபதியுடன் தங்கினான். ஆம் இந்திரன் பிரஜாபதியுடன் 101 ஆண்டுகள் பிரம்மசாரியாக வாழ்ந்தான்.

கனவில் உலவுகின்ற மனிதனும் ஆனமா அல்ல என்பதை இந்திரன் புரிந்துகொண்டதும் பிரஜாபதி அவனை மூன்றாம் படிக்குக் கொண்டுசெல்லத் தயாரானார். மனிதனின் மூன்று நிலைகளில் மூன்றாவதாக வருவது ஆழ்ந்த தூக்கம். அது விழிப்பும் அல்ல, கனவும் அல்ல. ஆனால் அது ஒரு நிலை, அதை நாம் அனுபவிக்கிறோம். அனுபவிக்கும் போது அதைப்பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும் விழித்தபிறகு, “நனறாகத் தூங்கினேன், பேரானந்தமாக இருந்தது’ என்று கூறுகிறோம். நன்றாகத் தூங்கியதையும் ஆனந்தத்தையும் அனுபவித்த ஒருவன் இருந்தேயாக வேண்டும். அவனே தூக்க நிலை மனிதன். அவனை ‘பிராஜ்ஞன்’ என்று வேதாந்தத் தத்துவம் அழைக்கிறது. அவனே ஆன்மா என்று போதித்தார் பிரஜாபதி. அதில் கூட இந்திரன் சிறப்பான கருத்தைக் காணவில்லை.இதை உணர்ந்த பிரஜாபதி மேலும் விளக்க ஆரம்பித்தார்

பிரஜாபதி கூறுகிறார்:- ‘இந்திரா இந்த உடம்பு அழியக்கூடியது; மரணத்தின் பிடியில் உள்ளது. ஆனால் மரணமற்ற, உடம்பற்ற ஆன்மாவின் இருப்பிடம் இது. உடம்பில் கட்டுண்டவன் நிச்சியமாக இன்ப துன்பகளின் பிடியில் உள்ளான். உடம்பில் கட்டுண்டவனின் இன்ப துன்பங்களுக்கு முடிவே கிடையாது. ஆனால் உடம்பில் கட்டுப்பட்டாதவனை இன்ப துன்பங்கள் தொடுவதே இல்லை.’

ஒரு பக்கம் உடல்-மனச்சேர்க்கை, மறுபக்கம் கடவுள். இந்த இரண்டிற்கும் இடையில் நிற்கிறான் மனிதன். அவன் உண்மையில் கடவுளைச் சேர்ந்தவன்; அமுதமயமான ஆண்டவனின் குழந்தை. ‘அழியாத அமரத்துவத்தின் குழந்தை’ என்றே உபநிஷதம் அவனை அழைக்கிறது. ஆனால் அவனோ காலங்காலமாக வருகின்ற அறியாமை காரணமாகத் தன்னை உடம்புடன் ஒன்றுபடுத்திக்கொள்கிறான்; உடம்பில் கட்டுண்டவனாகத் தன்னைக் காண்கிறான்; உடம்பின் இன்பதுன்பங்களைத் தனது இன்பதுன்பங்களாகக் கருதி ஒரு கணம் இன்பத்தில் திளைப்பதும், மறுகணம் துன்பத்தில் துவள்வதுமாக வாழ்கிறான். ஆன்மீக சாதனைகள் செய்து, தான் உடம்பில் கட்டுப்படாதவன், உடல்-மனச்சேர்க்கை தனது கருவி மட்டுமே, தான் உண்மையில் இறைவனின் குழந்தை என்பதை உணர்பவன் இன்ப துன்பங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நிலைத்த பேரானந்தத்தில் திளைக்கிறான்.

’காற்று உருவமற்றது. அதுபோலவே, மேகம், மின்னல், இடி ஆகியவையும் உருவமற்றவையே. இவை ஆகாசத்திலிருந்து எழுந்து, சூரியனை அடைந்து தத்தம் உருவங்களைப் பெறுகின்றன’.

மழைக்காலத்தில் காற்று சுழன்றடிக்கிறது, மேகங்கள் திரள்கின்றன, மின்னல் வெட்டுகிறது, இடி இடிக்கிறது. மழைக்காலம் ஓய்ந்து கோடைக்காலம் நெருங்கும்போது இவை அனைத்தும் படிப்படியாக மறையத் தொடங்குகின்றன. ஏன்? எவ்வாறு? சூரியனின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இவை தங்கள் உருவங்களை இழந்து ஆகாசத்தில் ஒடுங்குகின்றன. மீண்டும் இவை உருவம் பெறுகின்றன. ’சூரியனை அடைந்து’ என்றால் ‘சூரியனின் வெப்பத்தால்’ என்று பொருள்.

‘அதுபோல் ஜீவாத்மாவும் உடம்பின் பற்றிலிருந்து விடுபட்டு, பேரொளிப்பொருளை அடைந்து, தனது சொந்த இயல்பில் நிலை பெறுகிறான். பேரொளிப்பொருளாகிய அந்தப் பரம்பொருள் புருஷோத்தமர். தான் உடம்பல்ல, ஆன்மா என்பதை உணர்கின்ற அந்த ஜீவாத்மா உண்டு, விளையாடி, பெண்களுடனும் வாகனங்களுடனும் உறவினர்களுடனும் களித்து, தன்னுடனேயே பிறந்ததாகிய இந்த உடம்பையும் மறந்து திரிகிறான். தேரில் பூட்டப்பட்ட குதிரை எப்படி கட்டுண்டிருக்கிறதோ அப்படியே அவனும் இந்த உடம்பில் கட்டுப்பட்டிருக்கிறான்’.

முந்தின மந்திரத்தில் சூரிய-உதாரணத்தில் கண்டதுபோல் ‘பேரொளிப்பொருளை அடைந்து’ என்றால் ‘பேரொளிப்பொருளின் காரணமாக’ என்று பொருள். அதாவது, ‘இறையருளால்’ என்று அர்த்தம். இந்தப் பகுதியின் முதல் மந்திரத்தில் கண்டதுபோல், உடல்-மனச்சேர்க்கை மற்றும் கடவுள் ஆகிய இரண்டிற்கும் இடையில் இருப்பவன் போல் உள்ளான் ஜீவாத்மா. அவன் உடல்-மனச் சேர்க்கையின் பிடியிலிருந்து அல்லது பற்றிலிருந்து விடுபட்டு இறைவனை நாட வேண்டுமானால் அதற்கு அவருடைய அருள் தேவை. ஆன்மீக சாதனைகளின் வாயிலாக அவரது அருளைப் பெறுகின்ற ஜீவாத்மா தன்னை ஆன்மாவாக, இறையமசம் பொருந்தியவனாக உணர்கிறான். கூட்டில் அடைப்பட்டுக் கிடந்த சிங்கத்தைக் காட்டில் விட்டால் எப்படி மகிழ்ச்சியுடன் களித்துத் திரியுமோ அப்படி அந்த ஜீவாத்மாவும் களித்து மகிழ்கிறான். தான் பற்றிப்பிடித்திருந்த உடம்பைக்கூட மறக்கின்ற நிலையை அவன் அடைகிறான். ஆன்ம அனுபூதி பெறுகின்ற ஒருவனின் மகிழ்ச்சியைச் சாதாரண மனங்களுக்குப் புரியவைப்பதற்காக உணவு, வாகனங்கள், பெண்கள் என்றெல்லாம் உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர ஆன்ம நிலையை அடைந்த ஒருவன், உடம்பையே மறந்த ஒருவன் இவற்றையெல்லாம் மறந்தும் நாட மாட்டான். மேலும் புலன்களை பற்றி விளக்க ஆரம்பித்தார் பிரஜாபதி.

’கண்களின் உள்ளேயுள்ள ஆகாசத்தில் கண்புலன் உள்ளது. கண்ணின் தேவதை அங்கே உள்ளார். காண்பதற்கான கருவியின் வழியாகக் காண்பது ஆன்மாவே. அடுத்து, ‘நான் இதை முகர்கிறேன்’ என்று அறிவது ஆன்மாவே. முகர்வதற்கான கருவியின் வழியாக முகர்வது ஆன்மாவே. அடுத்து, ‘நான் இதைப் பேசுகிறேன்’ என்று அறிவது ஆன்மாவே. பேசுவதற்கான கருவியின் வழியாகப் பேசுவது ஆன்மாவே. அடுத்து, ‘நான் இதைக் கேட்கிறேன்’ என்று அறிவது ஆன்மாவே. கேட்பதற்கான கருவியின் வழியாகக் கேட்பது ஆன்மாவே’.

நாம் புறத்தில் கண், காது என்று காண்பவை பொறிகள். இவை வேதாந்த தத்துவ நூல்களில் ‘கோளகம்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை தூல உடம்பைச் சேர்ந்தவை; இந்த உடம்புடன் அழியக் கூடியவை. உண்மையில் செயல்படுபவை புலன்கள்-இந்திரியங்கள். இவை சூட்சம சரீரம் அல்லது நுண்ணுடம்பைச் சேர்ந்தவை. இவை பிறவிகள்தோறும் ஜீவாத்மாவுடன் சஞ்சரிப்பவை. இந்தப் புலன்கள் செயல்படுவதற்கான தளங்களே கோளகங்கள். ஒருவன் பார்வையற்றவன் என்றால் அது தூல உடம்பின் குறைபாடு மட்டுமே. அடுத்த பிறவியில் அந்தக் குறைபாடு தொடர வேண்டும் என்ற நியதி கிடையாது. ஒவ்வொரு புலனுக்கு அதிபதியான தேவதை உள்ளார். இவர் அதிஷ்டான தேவதை மற்றும் அதிதேவதை என்று அழைக்கப்படுகிறார். உதாரணமாக கண்புலனின் தேவதை சூரியன், கைப்புலனின் தேவதை இந்திரன். இவர்களுக்கு பின்னால் நின்று இவர்களை இயக்குபவர் இறைவன். அதாவது ஆன்மா.

’அடுத்து. ‘நான் இதைச் சிந்திக்கிறேன்’ என்று அறிவது ஆன்மாவே. மனமே ஆன்மாவின் தெய்வீகக் கண். இறையுலகை அடைந்த ஆன்மா, தான் விரும்பியவற்றையெல்லாம் தனது தெய்வீகக் கண்ணாகிய மனத்தால் கண்டுகளிக்கிறான்’.

இறைனுபூதி பெற்றவனின் நிலையை அன்னை ஸ்ரீசாரதாதேவி தமக்கே உரிய எளிமையான மொழியில் பின்வருமாறு கூறுகிறார்:-

இறையனுபூதி பெற்றவனுக்கு என்ன இரண்டு கொம்புகளா முளைக்கின்றன? இல்லை. அவனுக்கு உண்மை-உண்மையற்றது பற்றிய விவேகம் வருகிறது, விழிப்புணர்வு ஏற்படுகிறது. அவன் பிறப்பு-இறப்பைக் கடந்து செல்கிறான். கடவுளை உணர்வில் உணர்கிறோம்…. உணர்வில்தான் காட்சி, உணர்வில்தான் பேச்சு வார்த்தை. எல்லாம் உணர்வில்தான் நடக்கின்றன.

இறையனுபூதி என்பது உணர்வில் வருகின்ற மாற்றமே தவிர வேறல்ல. நாம் புறவுலகைத் தொடர்பு கொள்வதற்காக அமைந்த கருவிகளே மனமும் புலன்களும். எனவே அவை உலகை உலகாக மட்டுமே காண்கின்றன. ஆன்ம அனுபூதி பெற்றவனுக்கு மனமும் புலன்களும் தெய்வீகமாகிவிடுகின்றன. எனவே அவற்றின் பார்வையின் பரிமாணம் மாறிவிடுகிறது. வெறும் உலகை மட்டும் கண்ட மனமும் புலன்களும் அந்த உலகின் பின்னால் ததும்பி நிற்கின்ற இறையுணர்வைக் காண்கின்றன. இந்த உலகமே அவனைப் பொறுத்தவரை இறையுலகமாக மாறிவிடுகிறது. ‘சாதனைக் காலத்தில் இந்த உலகம் “மாய மாளிகை”. ஞானம் பெற்ற பிறகு, இறைக் காட்சிக்குப் பிறகு அதுவே “ஆனந்த மாளிகை” ஆகிவிடுகிறது’ என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

பிரஜாபதி இத்துடன் தனது விளக்கத்தை நிறைவு செய்தார். அதாவது அவர் கூறினார்: இந்த ஆன்மாவையே தேவர்கள் தியானம் செய்கிறார்கள். அதனால்தான் எல்லா உலகங்களும் அவர்களின் வசத்தில் உள்ளன. அவர்களுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றன. யார் இந்த ஆன்மாவை அறிந்து, அனுபூதியில் உணர்கிறானோ அவனுக்கும் எல்லா உலகங்களும் வசப்படுகின்றன. அவனுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றன. இவ்வாறு பிரஜாபதி கூறினார்

Article by: மக்கள் சேவையே மகேசன் சேவை

Comments

comments

Posted under: தர்ம நூல்களின் எளிய விளக்கங்கள், தர்ம‌மும் விஞ்ஞானமும், பதிவுகள்

Tagged as:

Comments are closed.