ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

ஸத்யமும் ருதமும்

பரிஷேசன மந்திரத்தில் [சாப்பிடுவதற்கு முன்பு சொல்லப்படும் மந்திரம்]  ‘ஸத்யம் த்வர்த்தேன (பதம் பிரித்தால்- த்வா ருதேன) பரிஷிஞ்சாமி’ என்று வருகிறது. இதன் பொருள் ‘ஸத்யமே உன்னை ருதத்தால் நனைக்கிறேன்’ என்பது. இரவில் இதை மாற்றி ‘ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி’ என்கிறோம். அதாவது, ‘ருதமே உன்னை ஸத்யத்தால் நனைக்கிறேன்’ என்கிறோம்.

இந்த ருதம் ஸத்யம் என்பது என்ன? இது நனைக்கக் கூடிய திரவமா? இல்லை எனில், நனைப்பது என்பது எதைக் குறிக்கிறது என்று சிந்திப்போம்.

நடைமுறையில் இந்த இரண்டு சொற்களுக்கும் உண்மை என்றே பொருள் சொல்லப்படுகிறது.

ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்மஸ் ஸநாதன:


என்ற ஒரு ப்ரஸித்தமான ச்லோகம் உள்ளது. ‘ஸத்யத்தைப் பேசுக, ப்ரியத்தைப் பேசுக, ஸத்யமாயினும் அப்ரியத்தைப் பேசாதே. ப்ரியமாயினும் அன்ருதம் பேசாதே’ என்பது இதன் பொருள்.

இந்த ச்லோகத்தில் ஸத்யத்திற்கு எதிர்மறையாக அஸத்யம் என்று கூறாமல் ருதத்தின் எதிர்மறையான அன்ருதம் என்ற சொல்லைக் கூறியிருப்பதால் ஸத்யம் ருதம் என்ற இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

ஒன்றை மற்றொன்றால் நனைக்கிறேன் என்பதால் அவை வேறு வேறு பொருள்கள் தான் என்பது உறுதியாகிறது. மேலும் வேதத்தில் ருதம் வரும் இடங்களில் எல்லாம் ஸத்யமும் கூடவே வருகிறது. ருதம் வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி என்றும், ருதம் அவாதிஷம், ஸத்யம் அவாதிஷம் என்றும் ருதம் ஸத்யம் பரம் ப்ரம்ம என்றும் அடுத்தடுத்து வருவதால் அது கூறியது கூறலாக இராது, வேறு வேறு பொருள் கொண்டவை தான் என்பது தெரிகிறது.

ரிக் வேத மொழிபெயர்ப்புகளைப் பார்த்தால், வேதத்தின் அடிப்படைக் கருத்தே ருதம் தானோ என்று நினைக்கும் அளவுக்கு இந்த ருதம் என்ற சொல்லும் இதே பொருளில் வ்ரதம், தர்மம் என்ற சொற்களும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. (சுமார் 350 தடவைகள்)

எல்லாத் தேவர்களும் ருதத்திலிருந்து தோன்றியவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ரிக் வேதம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தேவர்களை ருதத்தின் பிள்ளையாகக் கூறுகிறது.

(எண்கள் முறையே மண்டலம், சூக்தம், சுலோகங்களைக் குறிக்கும்.)

1.65.2 சோமன் ருதத்திலிருந்து தோன்றியவன்
1.70.1 அக்னி ருதத்தின் மகன்
1.113.12 உஷா ருதத்தில் தோன்றியவள்.
2.23.15 பிரஹஸ்பதி ருதத்தின் மகன்
5.61.14 மருத்துகள் (காற்றுகள்) ருதத்தின் மக்கள்
7.66.10 மித்ரன் (சூரியன்), வருணன் அர்யமான் ருதத்தின் மக்கள்
8.6.2 இந்திரன் ருதத்தின் மகன்

கீழ்க்கண்டோர் ருதத்தைக் காப்பாற்றி வலுப்படுத்துபவர்களாகக் கூறப்படுகிறார்கள்-

1.14.7 விஸ்வே தேவர்கள்
1.23.5 மித்ரன், வருணன்.
1.90.2 வருணன், மித்ரன், அர்யமான்
1.101.3 வருணன், சூர்யன்
2.29.1 விஸ்வே தேவர்கள், ஆதித்யர்கள்
3.10.2 அக்னி
10.25.3 சோமன்
1.47.1 அஸ்வினி தேவர்கள்

எனவே தேவர்களின் பிறப்புக்கும் காரணமாகி, தேவர்களால் நிலைநிறுத்தப்படுவதும் ஆகிறது ருதம்.

ருதம் என்பது என்ன?

அரசன் வருணன் சூரியனுக்கு பாதையை ஏற்படுத்துகிறான். இரவில் ஒளிரும் நட்சத்திரங்கள் பகலில் எங்கு போய்விடுகின்றன? இரவில் சந்திரன் பெருமையுடன் உலா வருகிறது. வருணனின் விரதங்கள் வலுவிழப்பதில்லை என்று ரிக் 1.24.8 சொல்வதால் சூரிய சந்திரர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நியதிப்படி காலம் தவறாமல் உலகைச் சுற்றி வருவதைத் தான் ருதம் விரதம் என்ற சொற்கள் குறிப்பதாக அறிய முடிகிறது.

ரிக் 1.123.9- உஷா (விடியற்காலை) ருதத்தை மீறுவதில்லை. குறிப்பிட்ட இடத்திற்கு நாள் தோறும் வருகிறாள்.

ரிக் 1.25.7- வருணன் பறவைகளின் பாதைகளை அறிந்துள்ளான். கடலில் இருக்கும் கப்பல்களையும் அறிந்துள்ளான். தன் ருதத்தின்படி காற்றின் திசைகளை அவன் அறிவான்.

ரிக் 1.101.3- இந்திரன் ருதம் கொண்டு நதிகளை விரியச் செய்தான். தாவரங்களை உண்டாக்கினான்.

மேற்கண்ட கூற்றுகளிலிருந்து ருதம் என்பது என்ன என்று ஓரளவு ஊகிக்க முடிகிறது. இயற்கையில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனி இயல்பு இருக்கிறது. சூரியன் வெப்பம் தருகிறது. நாள் தவறாமல் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. சந்திரன் இரவில் குளுமையான ஒளி தந்து, தனக்கென்று விதிக்கப்பட்ட கால அளவுப்படி தேய்தலும் வளர்தலுமான நியதியை பின்பற்றுகிறது. நட்சத்திரங்கள் இரவில் மட்டும் ஒளிர்கின்றன. காற்று, வெப்பம் குறைந்த இடத்திலிருந்து வெப்பம் மிகுந்த இடம் நோக்கி வீசுகிறது. நீர் மேட்டிலிருந்து கீழ்நோக்கிப் பாய்கிறது. தீ சுடுகிறது. மண்ணில் விழுந்த விதை முளைக்கிறது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான இயல்பு ஏற்படுத்தி அனைத்தையும் தன் ஆளுகைக்குக் கீழ் கட்டுப்படுத்தி ஒருங்கிணைத்து வைத்துள்ளது ஒரு பெரும் நியதி. இந்த நியதியைத் தான் வேதம் ருதம் என்கிறது. அதை நாம் இன்றைய மொழியில் இயற்கை விதி என்று அழைக்கிறோம்.

ருதம் தான் இறைவன்

ரிக் ஸம்ஹிதையில் தேவர்கள் தாம் துதிக்கப்படுகிறார்கள். தேவர்களுக்குத் தலைவனான முழு முதல் இறைவனைக் குறிக்கும் ஈச்வரன், பகவான், தேவதேவன், மஹாதேவன் ஆகிய சொற்கள் காணப்படவில்லை. தேவர்களைப் பிறப்பிப்பதும் ருதம் தான். தேவர்களின் அரசனாகவும் ருதத்தின் பெருங் காவலனாகவும் கூறப்பட்டுள்ள வருணனும் அந்த ருதத்தால் தோற்றுவிக்கப்பட்டவன் தான். எனவே ருதம் தான் பிற்காலத்தில் இறைவன் என்ற பெயர் அளிக்கப்படுகிறது என்பதை அறியலாம்.

இந்த விதியின்படி செயல்படும் இயற்கைச் சக்திகளை வேதம் பொதுவாக தேவர்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது. ‘தேவ’ என்ற அடைமொழி மற்றவர்களை விட ஸவிதாவுக்குத் தான் மிக அதிகமாகக் கொடுக்கப் பட்டிருப்பதிலிருந்து ஸவிதா எனப்படும் சூரியன் தான் வேத ரிஷிகளின் கவனத்தைக் கவர்ந்த முதல் தேவன் என்பதை ஊகிக்கலாம். ஒளி என்ற பொருளுடைய திவ் என்ற வேரிலிருந்து பிறந்த தேவ என்ற சொல் பிற்காலத்தில் பொருள் விரிவு பெற்று ஒளியுள்ள சூரிய சந்திரர்களையும் அக்னியையும் மட்டும் குறிக்காமல் கண்ணால் காண முடியாத வாயு முதலானவர்களையும் குறிக்கிறது.

ருதத்தின் பரிமாணம்

இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் தன் பங்கு என்ன என்ற கேள்வி வேத முனிவருக்கு எழுகிறது. இந்த உலகத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் யார் என்று அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. ஒரு நாள் அவருக்கு உண்மையின் காட்சி தெரிகிறது. அப்பொழுது அவருக்கு மனதில் ருதம் என்ற கருத்துரு தோன்றுகிறது. இந்த பெரும் இயற்கை நெறியில் தானும் ஒரு துகள் என்பதை உணர்கிறார். அந்த மகாசக்தியின் முன் தலை வணங்கிப் பணிதலைத் தவிர வேறு ஒன்றும் அவருக்குத் தெரியவில்லை. தன்னுடைய மனதில் தோன்றியதை அவர் பாடலாக்கி நமக்குத் தருகிறார்.

1.164.37- நான் யார்? எனக்கு தெரியவில்லை. மனம் அலைந்து கொண்டிருந்தது. ருதத்தின் தலைமகன் என்னை நெருங்கினான். அப்பொழுது இந்த சொல்லின் ஒரு பகுதியை நான் அடைந்தேன்.

எப்படி அறிந்தனர்?               

முனிவர்களுக்கு ருதம் பற்றிய அறிவு உடனடியாகத் தோன்றி விடவில்லை. படிப்படியாகத் தான் ஏற்பட்டது.

1.106.3- தேவர்களின் இரு தாய்கள் ருதத்தை வலுப்படுத்துகிறார்கள்,

மற்ற தேவர்கள் ருதத்தால் தோற்றுவி்க்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் நிலையில் ருதத்தைத் தோற்றுவித்தது யார் என்று இங்கு கூறப்படுகிறது.

5.5.6- காலையும் இரவும் ருதத்தின் தாய்கள்
என்பதிலிருந்து இரவும் பகலும் மாறி மாறி வருவது தான் பிரபஞ்சத்தின் ஒழுங்கு முறையில் அவர்களுக்கு முதலில் கவனத்துக்கு வந்த விஷயம் என்பது தெரிகிறது.

10.190.1- தவத்தின் உச்சகட்ட நிலையிலிருந்து ருதமும் ஸத்யமும் தோன்றின. அதிலிருந்து இரவு தோன்றியது. அதிலிருந்து கடல். கடலிலிருந்து வருஷம். இரவு பகலைப் படைத்த தாதா (பிரம்மா) பின் சூரியனையும் சந்திரனையும் பின்னர் பூமி, வானம் இடைவெளி மண்டலம் வெளிச்சம் இவற்றைப் படைத்தார்.

இரவு பகல் ஏற்பட்ட பின் சூரியனை பிரம்மா படைத்தார் என்பது நேரடியாகப் பார்த்தால் பொருள் பொருந்தாமல் உள்ளது. எனவே அதன் உட்கருத்து என்ன என்பதை ஆராயவேண்டும்.

ரிஷிகள் தவத்தின் (சிந்தனை மற்றும் ஆராய்ச்சியின்) மூலம் ருதத்தையும் ஸத்யத்தையும் அறிந்து கொண்டார்கள். முதலில் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது இரவு. பின்னர் கடல் பற்றி அவர்கள் அறிந்து கொண்டார்கள். பருவகாலங்கள் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் வருவதைப் பார்த்தபின் அவர்களுக்கு வருஷம் என்ற கருத்துரு புரிந்தது. ருதப்படி வரும் பருவகாலங்களுக்கு ருது எனப் பெயரிட்டனர். சூரியன், சந்திரன், பூமி, வானம், இடைவெளி, வெளிச்சம் இவை பற்றிய உண்மைகள் பின்னரே அவர்களுக்குப் புலனாயிற்று.

பிரபஞ்சம் படைப்பின் தொடக்க நிலையிலிருந்து கணம் தோறும் மாறிக் கொண்டு வந்திருக்கிறது. இன்னும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. நமக்கு முன் நடந்த மாற்றங்கள் நம் கவனத்துக்கு வருவதில்லை. நம் வாழ்நாளில் நடைபெறும் மாறுதல்களைப் பார்க்கும்போது நம்முடைய தலைமுறையில் தான் முன்னேற்றமோ பின்னடைவோ மிகுதியாக ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறோம். சில உதாரணங்கள் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் ஐப்பசியில் அடைமழை பெய்வது வழக்கம். இது மாறாத இயற்கை நியதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஆண்டு மழை பொய்த்து விட்டதாக வைத்துக் கொள்வோம். காலம் கெட்டுவிட்டது. தர்மம் தோற்றுவிட்டது, அதர்மம் வென்றுவிட்டது என்று புலம்புகிறோம். நீண்ட கால வானிலைப் பதிவுகளைப் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாதிரி வானம் பொய்த்திருப்பது தெரியவரும். வருடாவருடம் மழை பெய்வது மட்டும் வழக்கமல்ல, இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யாதிருப்பதும் வழக்கம் தான் என்று அறிகிறோம். விதி மட்டும் ருதம் அல்ல, விதிவிலக்குகளும் ருதமே.

பாதரசம், உண்டவர் உயிரைக் கொல்லும் இயல்பு உடையது. அதையே சில பச்சிலைச் சாறுகளின் மூலம் புடமிட்டு விட்டால் அது உயிர் காக்கும் மருந்து ஆகிறது. ருதம் தோற்றுவிட்டதா? இல்லை. பாதரசத்தின் விஷத்தை முறிக்கக் கூடிய பச்சிலைகள் பற்றி மனிதன் அறிந்து கொண்டான். அதுவும் இயற்கையால் விதிக்கப் பட்டது தான். இங்கும் ருதமே வெல்கிறது.

மேலே விட்டெறிந்த பொருள் கீழே விழுவது மட்டும் தான் இயற்கை நியதி என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். குறிப்பிட்ட வேகத்துக்கும் அதிகமாக ஒரு பொருளை விண்ணில் செலுத்தி, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் அது போகுமானால் அது அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்பதை நாம் இன்று அறிந்து கொண்டு விட்டோம். இங்கே மனிதன் இயற்கையை வெல்லவில்லை, ருதத்தின் மற்றொரு பரிமாணத்தை அறிந்து கொண்டான், அவ்வளவு தான்.

சில இயற்கை நியதிகளை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அறியாத நியதிகள் பலவுண்டு. இப்பொழுது நாம் அறிந்த ருதத்திற்கு மாறுதலாக ஒரு நிகழ்ச்சி நடக்குமானால் அன்ருதம் வென்று விட்டதோ, ருதம் வலிமையானது என்று இத்தனை நாளும் நம்பி வந்தது பொய்யோ, ருதத்தைக் காக்க வேண்டிய தேவர்கள் அதைக் காக்கத் தவறிவிட்டார்களோ என்று நினைக்கிறோம்.

இத்தகைய ஒரு மன நிலையில் தான் வேத முனிவர் பின்வருமாறு கேட்கிறார்.

ரிக் 1.105.
4.வேள்வி நாயகனைக் கேட்கிறேன். தூதனான அவன் சொல்லட்டும். பழைய ருதம் எங்கே? அதை புதிதாக வழங்குவோர் யார்?

5.மூவுலகும் வாழும் தேவர்களே, ருதம் எது? அன்ருதம் எது? என் பழைய கூவல் என்னாயிற்று?

6.ருதத்திற்கு உன் தாங்குதல் எது? வருணனின் கவனிப்பு என்பது என்ன? அர்யமானின் பாதையில் கொடியோரை நாம் எப்படிக் கடப்போம்?

ருதம் தோற்பதில்லை, நாம் இதுவரை அறியாத ருதத்தின் பகுதிகள் பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக நாம் அறிய முயலுகிறோம் என்ற ஞானோதயம் முனிவருக்கு பிறக்கிறது. அவரது உள்ளத்தில் ருதத்தின் புதிய பரிமாணம் தோன்றுவதைப் பின் வரும் பாடல் தெரிவிக்கிறது.

1.105.15 வருணன் பிரார்த்திக்கிறான். வழிகாட்டுபவனுக்கு எங்கள் பிரார்த்தனை. உள்ளத்தில் உள்ளவன் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறான். புதிய ருதம் தொடங்கட்டும்.

ருதமும் பரிணாம வளர்ச்சியும்

1.152.3- காலில்லாத பெண் காலுள்ள பிராணிகளுக்கு முன் தோன்றினாள். மித்ரனே, வருணனே, உன்னுடைய இந்த வேலையை யார் கவனித்தனர்?
கர்ப்பத்திலுள்ள குழந்தை உலகின் பாரத்தைத் தாங்குகிறது. ருதத்தை நிறைவேற்றுகிறது. அன்ருதத்தை வெல்லுகிறது.

டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி காலில்லாத கடல் வாழ் உயிரினங்கள் முதலில் தோன்றின, பின்னரே காலுள்ள பிராணிகள் தோன்றின. இங்கு சொல்லப்படுவது அந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கை தான் என்று கொள்ளலாம். முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம். அதன் பின் பல பல மாற்றங்கள் ஏற்பட்டு புதிய புதிய உயிரினங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. பழைய உயிர் வகைகள் சில அழிந்து விட்டன. சில இன்னும் தொடர்கின்றன. இவை எல்லாமே ஏதோ ஒரு இயற்கை நியதியின்படி தான் நடைபெறுகிறது என்பதை மட்டும் அறிந்த மனித இனம் அதை முழுமையாக அறிந்து கொண்டு விடவேண்டும் என்று காலம் காலமாக முயற்சி செய்து வருகிறது. மனித இனம் உள்ளவரை இந்த முயற்சியும் தொடரும்.

ருதத்தின் முக்கியத்துவம்

யார் அந்தக் குழந்தை? கண்ணுக்குப் புலனாகாமல் எல்லாப் பொருள்களின் உள்ளுறையாக, கர்ப்பமாக இருந்து எல்லோரையும் ஆட்டிவைக்கும் ருதத்தையே கர்ப்பத்திலுள்ள குழந்தை என்று குறிப்பதாகக் கொள்ளலாம். அதன் ஒழுங்கு முறைக்கு மாறான செயல்களை அது அனுமதிப்பதில்லை.

1.151.4- நேர்மையானவர்களே, மேலிருந்து வரும் அந்த ருதத்தின் மேலான சக்தியை அறிவியுங்கள். மாட்டை முளையில் கட்டுவது போல ருதத்தை வேலையுடன் இணையுங்கள்.

10.85.1-உலகைத் தாங்குவது ஸத்யம். ஆகாயத்தை சூரியன் தாங்குகிறது. ஆதித்யர்களை ருதம் தாங்குகிறது. விண்ணை சோமன் தாங்குகிறான்.

 

1.163.5-குதிரையைக் கடிவாளம் நெறிப்படுத்தி இலக்கடைந்து வெற்றி பெறச் செய்வது போல மக்களை ருதம் நெறிப்படுத்துகிறது.

 

7.76.4-பண்டை முனிவர் ருதத்தை அனுசரித்து தேவர்களுடன் விருந்துண்டனர்.

 

10.16.11, 10.154.4-பித்ருக்கள் ருதத்தை முதலில் ஆதரித்தனர்.

 

1.130.8-இந்திரன் ருதத்தை மதிக்கும் தன் அடியார்களுக்குப் போரில் உதவி செய்கிறான். மதிக்காதவர்களை அவன் துன்புறுத்துகிறான்.

 

1.41.4-தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட ருத வழி முள்ளற்றது.

 

8.31.13- ருத வழி நடக்க எளிதானது.

 

ருதமும் அம்ருதமும்

மேற்கண்ட கூற்றுகளிலிருந்து மனிதர்கள் ருதத்தை மதித்து நடக்க வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை என்பதை அறிகிறோம். ருதத்தை அனுசரித்தால் நமக்குக் கிடைப்பது அம்ருதம். அது தான் தேவர்களுடன் உண்ணப்படும் விருந்து. மீறினால் கிடைப்பது தண்டனை.

அம்ருதம் என்பது சாகா நிலை தரும் ஒரு பானம் என்று புராணக் கதைகள் சொல்லுகின்றன. இயற்கை நியதிகளை இன்று நாம் அறிந்துள்ளபடி சாகா நிலை என்பது சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது. எனவே அவர்கள் குறிப்பிட்ட அமர நிலை என்பது வேறு பொருளைக் குறிப்பதாக இருக்கலாம்.

கொன்றழிக்கும் கவலையினை சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கை தனை அழித்து விட்டால்
அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்

என்று பாரதி கூறுவதிலிருந்து அம்ருதம் என்பது ருதத்தை அனுசரிப்பதால் நமக்குக் கிடைக்கும் ஒரு ஆனந்தமான மன நிலையே என்பதை அறிகிறோம். இந்த நிலையில் கவலை, சினம், பொய், அச்சம், வேட்கை அழிந்து போகின்றன, காலம் பற்றிய உணர்வு மறைகிறது.

ஜே.கிருஷ்ணமூர்த்தியும் தியானத்தின் மூலம் அடையப்படும் காலம் கடந்த நிலை பற்றிக் கூறுகிறார்.

1.25.1 ருதத்தை மீறியவரை வருணன் யமனுக்கு இரையாக்குகிறான்

1.51.8 ருதத்தை மீறியவரை இந்திரன் தண்டிக்கிறான்.

எனப்படுவதால் சிற்றறிவுடைய பறவைகள், உயிரற்ற கப்பல்கள் முதற் கொண்டு ருதத்தை அனுசரித்து நடக்கும்போது மனிதன் மட்டும் சில சமயங்களில் ருதத்தை மீறுகிறான் என்பதும் தெரிகிறது.

ருதத்தை அனுசரித்து நடத்தல் என்றால் என்ன?

தவம் செய்து ருதத்தை அறிய வேண்டும், அதாவது, இயற்கையை உற்றுநோக்கி அதில் ஒரு ருதம் (ஒழுங்கு முறை) நிலவுவதை உணர்தல் வேண்டும். அத்துடன் நில்லாது, இந்த ஒழுங்கு முறையை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் ஸத்யம் ஒன்று உண்டு என்பதையும் உணர்தல் வேண்டும். இவ்வாறு ருதத்திலும் ஸத்யத்திலும் மனதை ஈடுபடுத்துதல் தான் ருதத்தை அனுசரித்தல் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் அவன் மனம் என்ற ஒன்றைப் பெற்றிருப்பதால் ஆணவம் உடையவன் ஆக இருக்கிறான். அதன் காரணமாக தன் அறிவினால் எதையும் சாதிக்க முடியும், இயற்கையை வென்றுவிட முடியும் என்ற தருக்கு ஏற்படுகிறது. சில வேலைகளில் அவன் வெற்றி பெறுகிறான். சில சமயங்களில், அவன் எவ்வளவு திட்டமிட்டிருந்தாலும், எதிர்பாராதபடி தோல்வி அடைந்து துயரப்படுகிறான். அந்தத் தோல்விக்கு அவனுடைய அறிவினால் காரணம் சொல்ல முடிவதில்லை. தன்னால் வெல்ல முடியாத, புரிந்து கொள்ளக் கூட முடியாத அந்த இயற்கை நியதிக்குத் தலைவிதி அல்லது ஊழ் என்று பெயரிட மட்டுமே முடிகிறது.

இனி ரிக் வேதத்தில் ஸத்யம் எவ்வாறு ஆளப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

ஸத்யம் = உண்மை

சில இடங்களில் ஸத்யம் இன்று நாம் வழங்கி வரும் முறைப்படி உண்மை என்ற பொருளில் வருகிறது.

1.108.1என்னுடைய ஸத்யமான சிரத்தையை மதித்து நீ வந்தாய்
1.127.8 அக்னி ஸத்யமான பிரார்த்தனைகளை ஏற்கிறார்
2.15.1 இந்திரனின் ஸத்யமான புகழ்களைச் சொல்லுகிறேன்.
3.54.4 ஸத்யமான வார்த்தை பேசும் முனிவர்கள் உன்னை அறிய முடிந்தது
6.30.4 இந்திரா உன்னைப் போல் ஒருவருமில்லை இது ஸத்யம்

பல இடங்களில் மேலும் விரிவான பொருளில் ஸத்யம் என்ற சொல் ஆளப்பட்டிருக்கிறது.

தேவர்கள் ஸத்ய வடிவினர்கள்

1.1.5, 1.1.6, 1.12.7 நீயே ஸத்யம் என்று அக்னி போற்றப்படுகிறான். அவன் அளிக்கும் ஆசியும் ஸத்யம். அவனுடைய வழிகளும் ஸத்யமானவை.
6.51.10, 8.59.5 வருணனும் இந்திரனும் மித்ரனும் அதே போலப் போற்றப்படுகிறார்கள்.
8.61.4 இந்திரன் ஸத்யத்தில் மாறுதலின்றி நிற்கிறான்.

ஸத்யம் = பரம்பொருள்

இந்திரன் ஸத்யத்திலிருந்து தோன்றியவன் என்று 4.19.2 உம் ருதத்திலிருந்து தோன்றியவன் என்று 8.6.2 உம் கூறுவதால் ருதமும் ஸத்யமும் ஒரே பொருளை, அதாவது பரம்பொருளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

தேவர்களை ஸத்யத்தின் வடிவினராகப் பேசிய வேதம், பெயர்கள் பலவானாலும் பரம்பொருள் ஒன்று தான் என்ற அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

1.164.46 –
இந்த்ரம் மித்ரம் வருணம் அக்னிம் ஆஹுரதோ திவ்யம் ஸ ஸுபர்ணோ கருத்மான்.
ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி அக்னிம் யமம் மாதரிஸ்வானமாஹு:

உள்ளது ஒன்று, அதை இந்திரன், மித்ரன், வருணன், அக்னி, கருத்மான், யமன், மாதரிஸ்வான் என்று அறிஞர்கள் பலவிதமாகப் பேசுகிறார்கள் என்று கடவுளைக் குறித்து எல்லா மதக்காரர்களும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு கருத்தைக் கூறுகிறது. இது தான் வேதத்தின் திரண்ட சாரம் என்று கொள்ளலாம். இந்து சமயம் பிற்காலத்தில் பல பல தெய்வங்களை ஏற்படுத்தி வளர்ந்ததற்கும், பிற சமயங்களைப் பகைக்காமல் அரவணைத்து மதிப்புடன் நடத்தியதற்கும் அடிப்படையான போதனை இதுவே.

ஸத்யம் தோற்பதில்லை

ஸத்யம் ஏவ ஜயதே ந அன்ருதம் என்ற உபநிடத வாக்கியம் ஒன்று உண்டு. ‘வாய்மையே வெல்லும், பொய் அல்ல’ என்று இதை மொழிபெயர்த்து, கடைசியில் என்றோ ஒரு நாள் ஸத்யம் வெல்லப்போகிறது என நாம் கருதுகிறோம். அது சரியான பொருள் அல்ல.

ஸத்யம் என்பது ஸத் என்ற சொல்லிலிருந்து தோன்றியது. அதற்கு உள்ளது என்று பொருள். எது உள்ளதோ அது ஸத்யம். தமிழில் உண்மை என்ற சொல்லும் உள்ளது என்ற சொல்லிலிருந்து தோன்றியது. உள்ளது, இருக்கிறது ஆகிய இரு சொற்களும் ஒரே பொருளை உடையவை ஆயினும் உள்ளது என்ற சொல்லுக்கு மட்டும் இறந்த காலமும் வருங்காலமும் இல்லை. அது முக்காலத்தையும் குறிக்கும் வினையாகும். ஜயதே என்ற சொல் எதிர்காலத்தைக் குறிப்பது அல்ல. வெல்கிறது என்ற பொருள் உடைய அது முக்காலத்துக்கும் பொருத்தமான நிரந்தர உண்மையைக் கூறுவது.

ஸத்யம் தான் வெல்கிறது, அன்ருதம் அல்ல. அதாவது ஸத்யம் ஆகிய பரம்பொருள் தான் முக்காலத்திலும் வென்று நிலை பெற்று இருக்கிறது. இயற்கை விதிக்கு முரணானது வெல்வது இல்லை என்பது தான் சரியான பொருள்.

சூரியனும் ஸத்யமும்

பல தேவர்கள் ஸத்ய வடிவினராகப் போற்றப்பட்டாலும் சூரியனுக்கும் ஸத்யத்துக்கும் உள்ள தொடர்பு சிறப்பானது. ‘தேவ’ என்ற அடைமொழி மற்றவர்களை விட ஸவிதாவுக்குத் தான் மிக அதிகமாகக் கொடுக்கப் பட்டிருப்பதை முன்னர்க் கண்டோம்.

10.55.6 வசிக்க வீடு இல்லாத சிவந்த பறவை (எங்கும் நிலைத்து இராமல் சுற்றிக் கொண்டே இருப்பதால் சூரியன் அவ்வாறு கூறப்படுகிறான்) வலிமையானவன். அவன் அறிந்ததெல்லாம் ஸத்யம். அது தோற்பதில்லை.

சூரியனுடைய தேருக்கு இரண்டு சக்கரங்கள் உள்ளன. ஒன்று ருதம் மற்றது ஸத்யம். சாதாரண மக்களுக்கு முதல் சக்கரம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது. ருதத்தை நன்றாக அறிந்த முனிவர்கள் மட்டுமே அவனுடைய இரண்டாவது சக்கரமான ஸத்யத்தைக் காண முடிகிறது.

ருதத்தின் மூலம் தான் ஸத்யம்

10.85.16 ருதத்தை அறிந்தவர்கள் தான் சூரியனின் அந்த மறைந்த சக்கரத்தைக் காண முடியும்.

ருதத்தின் மூலமாகத் தான் ஸத்யத்தை அறியமுடியும் என்ற கருத்தை
4.51.7 ஸத்யத்திற்குப் பிறப்பிடம் ருதம் என்று தெரிவிக்கிறது. இதை மற்றொரு பாடல் நேரடியாகவே கூறுகிறது.
7.56.12 ருதத்தை அனுசரிப்பவர்கள் ருதத்தின் மூலமாகவே ஸத்யத்தை அடைந்தனர்.

10.36.13 சூரியனை ஸத்யத்தின் தந்தையாகக் கூறுகிறது. இதை முன் கூறிய 4.51.7 மற்றும் 7.66.10க்கு முரண்படாத வகையில் சூரியன் மூலமாகத் தான் ஸத்யத்தை அறிந்தனர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அன்ருதமும் அஸத்யமும்

ருதம் என்பதற்கு எதிர்ச்சொல்லாக அன்ருதம் என்பதை வேதம் கூறுகிறது. இயற்கை நியதிகளுக்கு மாறாக ஒருவன் பேசினாலோ, நடந்தாலோ அது அன்ருதம். இதைத் தேவர்கள் தண்டிக்கின்றனர் என்கிறது வேதம்.

ஸத்யம் என்பது பரம்பொருளைக் குறிப்பது ஆதலால் அஸத்யம் என்பது பரம்பொருள் இல்லை என்று பொருள் ஆகிறது. அவ்வாறு எவரும் சொல்லார். பல வேறு மதக்காரர்களும் வெவ்வேறு பெயரிட்டு அழைப்பர். நாத்திகர்கள் வணக்கம் அவசியமில்லை என்பரே அன்றி ஏதோ ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதை மறுக்கார். இல்லை என்று சொல்ல எவராலும் முடியாது. அதனால் ஸத்யம் என்பதற்கு எதிர்ச் சொல்லான அஸத்யம் என்ற சொல் வேதத்தில் ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஸத்யமேவ ஜயதே ந அன்ருதம் என்ற உபநிடத வாக்கியத்தை முன்பு பார்த்தோம்.

பிரபலமான ஒரு சுலோகம் பல இடங்களிலும் காணப்படுகிறது. மூலம் மகாபாரதத்தில் உள்ளதாகத் தோன்றுகிறது. ஸத்யம் பேசுக, பிரியமானதைப் பேசுக. ஸத்யமாயினும் பிரியமல்லாததைப் பேசாதே. பிரியமானதாக இருப்பினும் அன்ருதம் பேசாதே என்கிறது. இங்கும் ஸத்யத்துக்கு எதிர்ச்சொல்லாக அன்ருதம் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேதத்தில் எல்லாக் கருத்துகளும் உருவகமாகவே கூறப்பட்டுள்ளன என்பதை இது வரை பார்த்த உதாரணங்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அதனால் தான் அது மறை எனப்படுகிறது. நனைத்தல் என்பதற்கு கலத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இயற்கைப் பொருள்களை உற்றுநோக்கு, அவற்றில் ஒரு ருதம் (ஒழுங்கு முறை) நிலவுவதைக் கவனி, இந்த ஒழுங்குமுறையை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் ஸத்யம் (பரம்பொருள்) ஒன்று உண்டு என்பதையும் கவனி என்ற கருத்தை வேதம், ருதத்தை ஸத்யத்தால் நனை, ஸத்யத்தை ருதத்தால் நனை, அதாவது இரண்டையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்து என்கிறது.

ருதத்தின் திறமையைப் பார்த்து வியக்கிறோம். ஸத்யத்தின் மௌனத்தில் நம்மை ஆட்படுத்திப் பணிகிறோம். நாம் ஒவ்வொரு வேளை சாப்பிடும்போதும் இறைவனையும் இறைவியையும் சேர்த்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நம் முன்னோர் இதை உணவு மந்திரமாக அமைத்தனர் போலும்.

மூலம்; http://bharathiadi.blogspot.in/2010/06/blog-post.html

Comments

comments

Posted under: தர்ம நூல்களின் எளிய விளக்கங்கள், தர்ம‌மும் விஞ்ஞானமும், பதிவுகள்

Tagged as: ,

Comments are closed.