ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?

life
வழக்கம்போல் ஞானியார் முன் பலர் அமர்ந்திருந்தனர். ஞானி,தியானம் கலைந்து அனைவரையும் பார்த்தார்.அந்தக் கூட்டத்திலேயே நன்கு படித்திருந்த ஒருவன் கேட்டான்

“சாமி,வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?அதன் நியதிகள் என்ன?சிறிது விளக்கமாகச் சொல்லுங்கள்”

முக்கியமான கேள்வி.ஞானி யோசித்தார்.

அனைவருக்கும் புரியும் படியாகச் சொல்ல வேண்டும்.”சரியான முறையில் வாழ்வதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன.சிலவற்றைக் கொள்ள வேண்டும்;சிலவற்றைத் தள்ள வேண்டும்.கவனமாகக் கேளுங்கள்.”

“கொல்லாமை வேண்டும்.கொல்லாமை என்பது ஒரு உயிரைப் போக்காமல் இருப்பது மட்டும் அல்ல.எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல்.நம் மனத்தால். சொல்லால், செயலால் பிற உயிர்களை வருத்தாதிருத்தல். நாமாகவே சில சமயம் தீங்கு செய்கிறோம்.பிறரைக் கொண்டு சில நேரம் தீங்கு செய்விக்கிறோம்.பிறர் தீங்கு செய்வதோடு ஒத்து சில நேரம் மகிழ்கிறோம்.இவை எல்லாமே விலக்கப்பட வேண்டும்.”

“பொய் சொல்லாதிருக்க வேண்டும்.பொய்யா விளக்கே விளக்கு என்று வள்ளுவர் சொல்கிறார். நாம் சொல்கின்ற பொய் நமக்கு மகிழ்ச்சியைத்தரலாம்.ஆனால் அது பிறர்க்குத் தீங்கு செய்யும்.”

“திருடக்கூடாது.தன்னுடையது அல்லாத,பிறருக்குச் சொந்தமான பொருள்களைக் கவர நினைப்பதே தவறு. இதற்கு அடிப்படை தகாத ஆசை.அதை நீக்குங்கள்.”

“கள்ளுண்ணுதல்,தகாத காமம் இவை விலக்கப் பட வேண்டியவை.ஒருவன் மது அருந்தினால் மதி மயக்கம் ஏற்பட்டு எல்லாத் தவறுகளும் செய்கிறான்.தன் மனையாளைத் தவிர பிற பெண்களை மனத்தாலும் நினைக்ககூடாது.இதையே ‘பேராண்மை’ என்கிறார் வள்ளுவர்.

“தள்ள வேண்டியவை சொன்னேன்.கொள்ள வேண்டியவை என்ன?-அடக்கத்தோடு இருக்கவேண்டும்.’தான்’ என்ற அகந்தையில்லாது இருக்கவேண்டும்.அடக்கம் அமரருள் உய்க்கும்.இதை உணருங்கள்.”

“நியாயத்தின் பால் நிற்க வேண்டும்.பகைவர், நண்பர்,உறவினர் எவராயிருப்பினும் நடு நிலைமை தவறாது இருக்க வேண்டும்.சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்,தராசு போல் இருக்க வேண்டும்.அதுவே சான்றோர்க்கு அழகு .”

“இருப்பதைப் பகிர்ந்துண்ண வேண்டும்.காக்கைகளைப் பாருங்கள்.ஒரு காகம் மற்ற காகங்களையும் அழைப்பதைப் பாருங்கள்.முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன் “யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி”என்பதை.

“தூய்மையாக இருக்க வேண்டும்.இங்கே தூய்மை என்பது மனத்தூய்மை.உடல் தூய்மை,குளிப்பதால் பெறப்படும்.மனம் தூய்மையாக இருக்க நல்ல எண்ணங்கள் வேண்டும்.பொறாமை ,ஆசை, கோபம்,காமம் ஆகியவை இன்றித் தூய்மையாக இருக்கும் மனத்தில் தான் இறைவன் இருப்பான்.”

“இவ்வாறு இருப்பவன் நல்லவன்.அவன் குண நலன்கள் எல்லோராலும் எண்ணிப்போற்றப்படும்.”

ஞானி கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.

“கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில் நின்றானே.”——–(திருமூலர்)

Article by Pattambi Iyer

Comments

comments

Posted under: ஏன்? எதற்கு? எப்படி?, தர்ம நூல்களின் எளிய விளக்கங்கள், பதிவுகள்

Comments are closed.