ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

ஆன்மீகம் – பாகம் 2

aanmeegam2எதனையும் சாராமல் என்னோடு நான் இருக்கிறேன் என்பது தான் உண்மையான விழிப்புணர்வு. நிகழ்காலத்தில் இருக்கின்ற விழிப்புணர்வுடன் செயல்படுபவர்களுக்குப் பிழைகள் ஏற்படுவதில்லை. விழிப்புணர்வைத் தவற விடுபவர்களே பிழை செய்கின்றனர்.

நாம் நம்பிக்கையில் வாழப் பழகியிருக்கிறோம். சமயச் சடங்குகளை நம்பிக்கொண்டு, அவற்றைத் தொடர்ந்து செய்து வருபவர்கள் தான் பெரும்பாலோர். உறவுகளையும், பொருள்களையும் தேடுவதும் நம்பிக்கையின் அடிப்படையில் தான். ஆனால் உண்மையில் இந்த நம்பிக்கை என்பது ஒரு கருத்தே தவிர வேறல்ல. நம்பிக்கை நிலைப்பதில்லை. நம்பிக்கை மாறும் தன்மை கொண்டது. நாம் நினைத்த விதத்தில் ஒரு பொருள் இல்லையென்றால் அதில் வைத்த நம்பிக்கை பொய்யாய்ப் போய் விடுகின்றது. நம்பிக்கை வெறும் எண்ணமே தவிர உண்மையல்ல.

இதனால் தான் பல நேரங்களில் நாம் இறை இருக்கிறரா என்ற கேள்வி தொடுக்கிறோம்!..

அன்பும் இதே போன்றதுதான். உண்மையில் அன்பு என்பது உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்றதே தவிர, அந்த அன்பு உண்மையான ஆத்மாவின் வெளிப்பாடு அல்ல. நாம் அறிந்து வைத்திருக்கும் அன்பு என்பது சுயநலமிக்க ஒரு சிறிய வெளிப்பாடு. கருணை என்ற கடலிலிருந்து எடுக்கப்பட்ட கையளவு தண்ணீரே அன்பு எனப்படுகிறது. அதை நாம் நமக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே விட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் உண்மையில் அன்பு என்று ஒன்றை கொண்டு இருந்தோம் என்றால் , எல்லோரிடமும் இருந்து இருப்போம்.. அனால், அப்படி இல்லை.. குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே கொண்டு உள்ளோம்… மீதி எல்லாமே விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதே…

அன்பு, வார்த்தைகளால் வெளிப்படுவதல்ல. நமது செயல்களின் வாயிலாக வெளிப்படுவது. அன்பு சுயநலத்துடன் வெளிப்படும்போது அதன் எதிர்மறை விளைவுகளான வெறுப்பு, பகை, கோபம், பொறாமை, பேராசை போன்றவையும் வெளிப்படுகின்றன. அன்பு அதிகாரம் செய்ய வைக்கிறது. அன்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அன்பு அதிருப்தியைத் தருகிறது. சந்தேகப்பட வைக்கிறது. இப்படிப்பட்ட அன்பு உண்மையான அன்பு அல்ல.

அன்பு என்ற உணர்வை வாழ்க்கையில் பயன்படுத்தியபோது பயம் என்னைச் சூழ்ந்தது. இந்த பய உணர்வு பாதுகாப்பின்மையை, சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ஆன்மாவைப் பற்றி அறிவதற்காக என்று குருவைத் தேடி வந்தவர்களை விட, வாழ்க்கையில் ஏற்பட்ட பயத்திலிருந்து விடுபடுவதற்காக அவரைத் தேடி வருபவர்கள் தான் அதிகம். தமக்கு ஏற்பட்ட தோல்விகளால், துயரங்களால் துரத்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபட மேற்கொண்ட தேடலினால் அவர்கள் குருவை நாடுகின்றனர்.

ஆகவே, அன்பு என்பது வெறும் வார்த்தைக்கு மட்டுமே உரிய ஒன்றே தவிர அன்பு உண்மையல்ல. ஆனால் அன்பின் அடித்தளமான கருணையில் பயம் இல்லை. கருணை என்னிலிருந்து தொடர்ந்து வெளிப்படும்போது என்னிலிருந்து பயம் போய் விடுகிறது. என்னில் சுயநலமில்லை. மாறாக ஆனந்த நிலை ஏற்படுகின்றது. அது எனக்கும், பிறருக்கும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

நடைமுறை வாழ்க்கையில் பிறர் பிழையாக நடந்துகொள்ளும் வேளைகளில் கருணையினால் அவர்களது அறியாமை எனக்குப் புலப்பட்டு இரக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்தப் புரிதல் என்னைச் சரியான விதத்தில் செயல்பட வைக்கிறது. இதைத் தான் இயேசுநாதர், தந்தையே! இவர்கள் அறியாமையால் தாங்கள் செய்வதை உணர்வதில்லை! இவர்களைக் கருணையுடன் மன்னியுங்கள்! என்று மன்றாடினார்.

நான் புரிந்துகொள்ளாத பல விடயங்களில் அனுபவம் என்பதும் ஒன்று. எனது ஆத்ம ஆற்றல் ஐம்புலன்களின் வழியாக வெளிப்பட்டு செயல்படுகின்றபோது, எனக்கு அவை அளிக்கின்ற உணர்வே அனுபவம் என்று ஆகிறது. அனுபவங்கள் ஒரே மாதிரி ஏற்படுவதில்லை. அறிவின் வளர்ச்சி மட்டத்திற்கேற்ப அனுபவங்கள் ஏற்படுகின்றன. இவை பழையனவற்றோடும், பிறரின் அனுபவங்களோடும் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ளப்படுகின்றனவே தவிர, யாரோ சொன்னவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் உண்மையல்ல. உண்மையான அனுபவம் என்பது எனது அடி ஆழத்திலிருந்து வெளிப்பட வேண்டும்.

எனவே நம்பிக்கை, காலம், அன்பு, பயம், அனுபவம் என்ற எல்லாமே வெறும் வார்த்தைகள் மட்டுமே. இவையெல்லாமே பொய்யானவை. நாமாக உருவாக்கிக்கொண்டவை. உடல், மனம், புத்தி ஆகியவை எல்லாம் பொய் என்று நாம் இப்பொழுது புரிந்துகொண்டுவிட்டோம். அந்தப் புரிதலை முழுமைப்படுத்த வேண்டுமென்றால், இவற்றோடு நாம் சுமந்துகொண்டிருக்கின்ற மேற்குறித்த சொற்களும் பொய்யே என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அவை எந்த விதத்திலும் நமது விழிப்புணர்வைத் தடை செய்யக்கூடாது.

நமது பரிணாம வளர்ச்சியைத் தடைசெய்யக்கூடிய தடைக் கற்களாக ஒப்பீடு, குறை சொல்லுதல், நியாயப்படுத்துதல் போன்றவை இருக்கின்றன. நம்மோடு பழகுகின்றவர்களின் தன்மைகளை நமது பண்புகளோடு ஒப்பிட்டுப்பார்த்து நமது விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்துவதும், அவர்களிடம் இருக்கின்ற குறைகளைப் பெரிது படுத்திச் சுட்டிக் காட்டிக் குறை கூறுவதும், எனக்குத் தான் எல்லாம் தெரியும், எனது செயல்கள் எல்லாம் சரியானவையே என்று தன்னையும், தனது செயல்களையும் நியாயப்படுத்தி அடித்துப் பேசுவதும் பெரும்பாலோரிடம் காணப்படுகின்ற பெருங் குறைகளாகும்.

அவற்றோடு வரலாறு பார்த்தல் என்பது மற்றொரு தடையாக நமக்குள் எப்போதும் இருக்கிறது. இவர் யார்? இவரது பின்னணி என்ன? இவர் முன்பு எப்படி இருந்தார்? இப்போதைய இவரின் நிலை என்ன? இது நடிப்பா? வேடமா? என்று ஒருவரைப்பற்றி மனத்திரையில் ஓடவிட்டு எடைபோட்டுப் பார்ப்பதே வரலாறு பார்த்தல் என்ற குறையின் விரிவாகும். இது நம்மிடமிருந்து நீக்கப்பட வேண்டும்.

ஏனெனில், எல்லாமே ஒன்று. பெயர்களும், தோற்றங்களும் மட்டுமே வேறுபட்டவையே தவிர, உண்மையில் எல்லாம் ஒன்றுதான். ஆத்மா ஒன்று தான் இப்படிப் பலவிதமாகக் காட்சியளிக்கிறது என்பதை ஓர் ஆன்மீக சாதகர் புரிந்துகொண்டபின், அவரா? இவரா? என்றெல்லாம் ஆராய்வது பிழையான செய்கையாகும்.

இந்தப் படைப்பு மூன்று வித நிலைகளில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அவை ஜாக்ரதா என்னும் விழிப்பு நிலை. ஸ்வப்னா எனும் கனவு நிலை. சுசுக்தி எனும் ஆழ் உறக்க நிலை. இந்த மூன்று நிலைகளிலும் ஆத்மாவாகிய அது தான் செயல்படுவதாகவும், சாட்சியாகவும் இருக்கிறது. உடல் நானல்ல. அதனால் ஓரளவிற்கு இந்த உடலின் மீது அக்கறையும், கவனமும் செலுத்திப் பராமரித்தால் போதுமானது. மற்றவற்றை உறக்கத்தில் தானாகவே அது சரி செய்துகொள்ளும். துாக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பிரம்மம் தந்த வரப்பிரசாதம். எத்தகைய கொடிய நோயும், மனத்துயரமும் துாக்கத்தில் இல்லாமற் போய்விடுகிறது. அதோடு உறக்க நிலையில் உடல் உறுப்புக்கள் அனைத்தும் சீரமைப்பு செய்யப்படுகின்றன. அதனால் தான் களைத்துப் படுத்தாலும், துாங்கி எழுந்ததும் புத்துணர்ச்சி ஏற்படுகின்றது.

மூன்று நாட்கள் தொடர்ந்து துாங்காவிட்டால், உடல் சோர்வும், மனத்தளர்ச்சியும் ஏற்பட்டுவிடும். துாக்க மாத்திரை கொடுத்து மருத்துவர் நோயாளியைத் துாங்க வைப்பது உடல் மன இயக்கத்தை நிறுத்தி ஓய்வு கொடுப்பதற்காகவே.

உடல் உறக்கத்தில் ஆழ்ந்தாலும், மனம் செயல்படுகின்ற நிலையே கனவு. இந்தக் கனவுகளில் எல்லாமாக இருப்பதும் நானே. துாங்கி எழுந்ததும் கனவு போய்விடுகின்றது. கனவில் கண்டவை உண்மையல்ல என்பது புரிகின்றது. அதுபோன்றது தான் இந்த வாழ்க்கையும் என்கின்றனர், ஞானியர். உடலும், மனமும் செயலற்று இயங்காத நிலையில், கனவுகளும் நீங்கிய ஆழ் உறக்க நிலையில் எனக்குள் இருப்பது யார்? எதுவுமே தெரியாத நிலையில் துாங்கி எழுந்ததும் சுகமாய்த் துாங்கினேன் என்று சொல்வது எதனால்? அந்த நிலையில் அந்த சுகத்தை அனுபவிக்கின்ற அதுதான் உண்மையான ‘நான்’.

இந்த உணர்வு, விழிப்பு நிலையில் சக்தியாக வெளிப்பட்டு செயல்படுகின்றது. கனவில் மனமாக வெளிப்பட்டுக் காட்சிகளை நிகழ்த்துகின்றது. ஆழ் உறக்க நிலையில் சாட்சியாக இருந்துகொள்கிறது. அதுமட்டுமே இருக்கின்ற அந்த நிலை நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றது. ஆனால் ஆழ் உறக்க நிலையில் வளர்ச்சியில்லை. சுகம் மட்டுமே இருக்கிறது.

Article by Pattambi Iyer

Comments

comments

Posted under: தர்ம நூல்களின் எளிய விளக்கங்கள், பதிவுகள்

Tagged as:

Comments are closed.