நாம் ஒன்றை ஆராய்ச்சி செய்தால் நமக்கு இரண்டு விதமான அறிவு, உண்மை கிடைக்கும்.
முதலாவது, எது சரியானது என்ற அறிவு. இரண்டாவது, எது சரியில்லாதது என்ற அறிவு.
சரி எது, தவறு எது என்று விளங்கும் உண்மை எது , பொய் எது என்று விளங்கும்.
சத், அசத் என்று அதை கீதை கூறுகிறது.
அரை இருட்டில் சற்று தூரத்தில் கிடப்பது பாம்பா, கயிறா என்று தெரியவில்லை. சற்று நெருங்கி சென்று ஆராய்கிறோம். பாம்பு அல்ல, கயிறு தான் என்று தெரிகிறது. பாம்பு பொய், கயிறு நிஜம்.
எது சத்தியமானது என்று எப்படி அறிந்து கொள்வது ?
சத்யமான ஒன்றிற்கு ஏதாவது குணாதிசயம் இருக்கிறதா ? இப்படி இப்படி இருந்தால் அது உண்மையானது, சத்தியமானது என்று அறிந்து கொள்ளும்படி ஏதாவது கோட்பாடு இருக்கிறதா என்றால் – இருக்கிறது என்கிறது கீதை. அது மட்டும் அல்ல, ஒரு பெரிய பட்டியலே தருகிறது….
முதலாவதாக…எது மற்றொன்றை சார்ந்து இருக்கிறதோ, அது நிரந்தரமானது, உண்மையானது அல்ல. இரண்டு பொருள்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தால் அவை இரண்டுமே நிரந்தரமானவை அல்ல.
எப்படி ? கிருஷ்ணன் சொல்கிறான்.
நாம் உணரும் இன்பமும் துன்பமும் இரண்டு காரணங்களால் நிகழ்கின்றன.
ஒன்று புறக் காரணம் – சூடு, குளிர், உணவு, சுடு சொல் போன்ற புறக் காரணங்கள். இரண்டாவது, நம் மனம் என்ற அகக் காரணம்.
ஒரு உணவை ஒருவன் “ஐயோ காரம்” என்கிறான். அதே உணவை மற்றொருவன் ” என்ன இது உப்பு உறைப்பு இல்லாமல் இருக்கிறது ” என்கிறான். உணவு ஒன்று தான். சுவை மாறுபடுகிறது.
எது உண்மை ? காரமா ? காரம் இல்லாத தன்மையா ?
புலன்களும், புலன்களால் நுகரப்படும் இன்ப துன்பங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. எனவே இரண்டும் உண்மையானவை அல்ல.
அனைத்து உறவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை தானே ?
அர்ஜுனனின் தயக்கம் எல்லாம் உறவுகளை எப்படி கொல்வது என்பதில்தான் அடங்கி இருக்கிறது. அதை விளக்க வந்த கிருஷ்ணன், அதை மட்டும் விளக்க வில்லை, அதையும் தாண்டி உறவுகள் மட்டும் பொய் அல்ல வேறு எது எல்லாம் பொய் என்று சொல்கிறான். கீதை காலத்தை தாண்டி நிற்பதற்கு
அதுவும் ஒரு காரணம்.
எது ஒன்று, எதையும் சாராமல் தனித்து நிற்கிறதோ அதுவே உண்மையானது, நிரந்தரமானது.
Article by Pattambi Iyer