ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

கர்மா !! – பாகம் 1

இறைவன் பாரபட்சம் பார்க்காதவன் என்பது உண்மை என்றால் ஜென்மங்கள் உண்மையாகின்றன. ஜென்மங்கள் உண்மை என்றால் அதற்கு காரணமாக இருக்கின்ற “கர்மவினை” உண்மையாகிறது. ஆக இவ்விரண்டையும் நாம் இறை நம்பிக்கை உடையவர்களிடம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கலாம்.

ஜென்மமும், கர்ம வினையும் உண்மை என்றால் என்னுடைய போன ஜென்மத்து உடலுக்கும், இந்த ஜென்மத்து உடலுக்கும் பொதுவாக ஏதோ ஒன்று இருந்தாக வேண்டுமே ? ஆக இவ்விதம் “ஆத்மா” என்பதின் இருப்பு நிரூபிக்கப் படுகிறது.

சிலர் அலுத்துக் கொள்வது உண்டு. “அந்தந்த ஜென்மத்தில் செய்யும் கர்ம வினையை அவ்வப்போதே கழிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் அல்லவா ?” என்று கேட்கிறார்கள். “நான் போன ஜென்மத்தில் என்ன செய்தேன் என்று தெரியாத நிலையில் இந்த ஜென்மத்தில் எதற்கு அதனால் பாதிக்கப்பட வேண்டும் ?” என்றும் வினா எழுப்புகிறார்கள். அதே ஒருவர் சுகத்தை அனுபவிக்கையில் ஏன் போன ஜென்மத்தில் செய்த நல்வினைகளுக்கு இப்போது சுகப்படுகிறேன் என்று கேட்பதில்லை.

நீங்கள் ஊதாரியாக செலவு செய்பவர், அதனால் நிறைய கடன் வாங்கி விட்டீர்கள். திடீரென கந்து வட்டிக்காரன் உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறான். அனைத்து கடனையும் இப்போதே கொடு என்கிறான். நாம் என்ன சொல்வோம். “ஐயா, என்னால் உடனே எப்படி அத்தனை கடனையும் திருப்பி தர முடியும் ? தவனை முறையில் திருப்பி கட்டுவதற்கு வழி வகை செய்யுங்களேன் என்று கேட்போம் அல்லவா ? ஆனால் எந்த கந்து வட்டிக்காரன் அதற்கு சம்மதிப்பான் ?

ஆனால் இறைவனோ பேரருளாளன். அவன் நாம் பல ஜென்மங்களில் சேர்த்து வைத்துள்ள பாவ மூட்டைகளை ஒரே ஜென்மத்தில் கழிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதில்லை. நாம் பல நூறு ஜென்மங்கள் எடுத்து நாம் வாங்கிய கடனை (பாவங்களை) நல் வினைகள் ஆற்றி சிறிது சிறிதாக போக்குவதற்கு வழிவகை செய்கிறான். நாம் மேல்ல மெல்ல ஆன்மீக வளர்ச்சி பெறத் தொடங்கி அதன் பயனால் ஏதாவது ஒரு ஜென்மத்திலாவது ஏதேனும் ஒரு யோகத்தில் திளைத்து, இறைவனை சரனாகதி அடைந்து நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பாவங்களையும் கழிப்பதற்கான சாத்திய கூறுகளை ஏற்படுத்தி வைத்துள்ளான்.

சேர்த்து வைத்திருக்கும் கர்மங்கள் (நல்லது தீயது இரண்டும்) “சஞ்சித கர்மா” எனப்படுகிறது. இந்த ஜென்மத்தில் எதிர்வினையை உண்டாக்கி எத்தகைய உடலை எடுக்க வேண்டும் என நிர்னயிக்கும் கர்மாக்கள் “ப்ராரப்த கர்மா” எனப்படுகிறது. சேர்த்து வைக்கப்பட்ட கர்மாக்களில், எந்த கர்மாக்களின் காலம் வந்து விட்டதோ அது “ப்ராரப்த கர்மா” எனப்படுகிறது. சுய இச்சையில் ஆற்றும் கர்மம் – இச்சா என்றும், தன்னை அறியாமல் செய்யப்படும் கர்மம் – அநிச்சா என்றும், மற்றவர்கள் செயல்களால் நம்மை சேரும் கர்மம் – பர இச்சா என்றும் ப்ராரப்த கர்மா மூன்று வகைப்படுகிறது.

“ஒருவரின் கர்ம வினைகளில் நான் குறுக்கீடுவது இல்லை” என்கிறார் கீதையில் பகவான். கர்ம வினைப்படிதான் அனைத்தும் நடக்கிறதென்றால் இறைவன் என்பது எதற்கு என்கிற கேள்வி எழுகிறதல்லவா ? அதை குறித்து அடுத்த‌ பதிவில் பார்ப்போம்.

Comments

comments

Posted under: பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *