ஆன்மீகம் என்றாலே பலருக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது. வேறு பலருக்கோ ஆன்மீகம் என்றால் கோவில். பூஜை. வழிபாடு என்ற அளவோடு நின்றுவிடத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆன்மிகம் என்பது நம்மைப் பற்றிய விஷயம். நம் உள்ளே இருக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவு. ஆம்! நம்மை பற்றிய உண்மைகளை நாம் சரியாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்ள உதவுவதுதான் ஆன்மீகம். இல்லையே! அதுபோல் நமது மன நிறைவும், மகிழ்ச்சியும் வெளியில் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் நமக்குள் தான் உள்ளன.
நம்மைப் பற்றிய உண்மைகளை நாம் ஒரு குருவின் மூலமாகத் தான் மிகச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதற்குக் குருவை நாம் அணுகவேண்டும். குருவை நெருங்கியிருந்து, அவர் உபதேசிப்பவற்றை உற்றுக் கவனித்து, உள்வாங்கி அவற்றை இடைவிடாமல் சிந்தித்துப் பார்த்தால் உட்பொருள் விளங்கும். அப்பொழுது நாம் கொண்டிருக்கின்ற பொய்யான போலித்தனங்களெல்லாம் ஒவ்வொன்றாகத் தானாகவே நம்மை விட்டு விலகி இல்லாமற் போகும். இதற்கு நாம் அந்த உபதேசத்தை வெறும் அறிவாக மட்டும் பெறாமல் உள்ளுணர்வால் அனுபவிக்கின்ற தன்மை வேண்டும். அந்த உபதேசத்தால் நமக்கு அகமாற்றம் ஏற்பட வேண்டும். உலகியல் வாழ்க்கை முறையில் பார்வை மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த வகையில் ஒரு குருவின் வாயிலாக அடியேன் பெற்ற உபதேசங்களைச் சிந்தித்து அவற்றின் உயர்வுத்தன்மையை உணர்ந்ததினால், யான் பெற்ற இன்பத்தைப் பெறுக இவ்வையகம்!
நமது முந்தைய வாழ்க்கை முறையில், ஒரு செயலைச் செய்து முடித்த பிறகுதான் அது முட்டாள்தனமானது, அதைச் செய்திருக்கக்கூடாது போன்ற எண்ணங்கள் ஏற்பட்டன. ஆனால் ஞானத்தினால் அகமாற்றம் ஏற்பட்ட பிறகு ஒரு செயலைச் செய்யும் முன்னரே உள்ளுணர்வு நம்மை எச்சரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அறிவற்ற செயலின் விளைவு உடனே எனக்குள் சுட்டிக் காட்டப்படுகின்றது. சிந்திக்காமல் ஒன்றைச் செய்ய முற்பட்டாலும் கூட உள்ளுணர்வு அதைச் செய்ய விடாமல் தடுக்கிறது.
ஆன்மீக சாதகரில் ஒரு பெண்மணி, தனது சகோதரி தன் தாயைப் பற்றிய மனக்குறை அனைத்தையும் வசை மொழிகளால் தன்னிடம் கொட்டித் தீர்த்தபோது, பழைய மன நிலையில் தான் இருந்திருந்தால் அவளைத் திருப்பி நன்றாகத் திட்டியிருப்பேன் என்றும், இன்றைய ஆன்மிக மனநிலையில் அவள் கூறியவற்றை அமைதியாகக் கேட்கவும், சமாதானமும், அறிவுரையும் கூறக்கூடிய பக்குவம் தனக்கு ஏற்பட்டிருந்ததைத் தான் உணர்ந்ததாகவும் கூறினர். மேலும் அவர் தன் சகோதரி, உனக்கு இவற்றைக் கேட்டுக் கோபமே வரவில்லையா? உன் உணர்ச்சி நரம்புகள் செத்து விட்டனவா? என்று கேட்டதாகவும் கூறினார்.
இந்த நிலைதான் ஆன்மீக சாதகர்களுக்கு ஏற்பட வேண்டிய அகமாற்றத்தின் உயர் நிலை. இந்த மாற்றம் பிறருக்குத் தெரிய வேண்டும். நமது செயல்கள் நமது அமைதி நிலையைப் பிறருக்கு உணர்த்த வேண்டும். எனக்குள்ளே இருக்கின்ற எல்லாமே, எண்ண வடிவில்தான் இருக்கின்றன. வீடு, சொத்து, உறவுகள் எல்லாமே எண்ணம் தான். இவை பற்றிய எல்லா எண்ணங்களையும் என்னிலிருந்து நான் நீக்கி விட்டால் அது தான் விடுதலை. இதற்கு அறிவுத் தெளிவு தான் தேவை. இவற்றைப் பற்றி ஏற்றி வைத்துப் பார்க்காமல், வெறும் உண்மையை மட்டும் பார்க்கத் தெரிந்துகொண்டுவிட்டால், இவற்றினால் ஏற்படும் இன்ப துன்ப இழப்புகள் என்னைப் பாதிக்காது. வீடு, கார், நகைகள் என்பதெல்லாம் உண்மையில் என்ன? வெறும் கல்லும், மண்ணும், தகரமும், கரியும் தானே! இவற்றிற்கு மதிப்பு எதனால் ஏற்பட்டது? நான் ஏற்றி வைத்துப் பார்த்ததால் தானே?
இப்பொழுது பொருளாதாரச் சீர்குலைவு எல்லா நாடுகளிலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவில் ஒரு நகரத்தில் வாழ்ந்த அத்தனை குடும்பங்களும் இடம் பெயர்ந்து கிராமங்களை நோக்கிச் சென்று விட்டதாகச் செய்தி. தொழிற்சாலைகள், பெரிய வேலை வாய்ப்புகள் என்று நகரங்களைத் தேடிக் கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தது மாறி, இப்பொழுது மீண்டும் கிராம வாழ்க்கைக்குத் திரும்புகின்ற நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பொருளாதார பாதிப்பு ஆன்மீக அகமாற்றம் ஏற்பட்டவருக்கு இருக்காது. ஏனெனில் பொருளின் உண்மை மதிப்பை அறிந்தவராக எப்பொழுதும் அவரால் செயல்பட முடியும்.
நாம் அறிந்திருக்கும் பல உண்மைகள் ஆராய்ந்து பார்த்தால் உண்மையல்ல என்பது தெரிய வரும். சூரியன் உதிப்பதாகவும், மறைவதாகவும் கூறுகின்றோம். ஆனால் சூரியன் தோன்றுவதுமில்லை; மறைவதுமில்லை. பூமிதான் அதைச் சுற்றிச் சுழல்கிறது. அதனால் இரவு பகல் ஏற்படுகிறது. காலில் முள் குத்திவிட்டது என்று கூறுவது பிழை. முள்ளில் காலை வைத்துவிட்டேன் என்று சொல்வதுதான் சரி. அப்படிச் சொல்கிறோமா?
வாழ்க்கையில் மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வயது கூடிக்கொண்டே போகிறது. காலம் போகிறது என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் காலம் போய்க்கொண்டிருக்கிறதா? காலம் என்பது முடிவற்ற ஒரு பாதை. அது எங்கும் செல்வதில்லை. அது நமக்கு முன் விரிந்திருக்கிறது. காலம் நகர்வதில்லை. நமது வாழ்க்கைதான் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஒளியை வைத்துத் தான் கணக்கிடப்படுகிறது. நாம் ஒரு செகண்ட் என்று சொல்கின்ற கால அளவை அணு அளவில், நனோ செகண்டில் அளந்து பார்த்தால், ஒன்றின் கீழ் 17 கோடி பில்லியன் செகண்ட் என்று அதற்குரிய நேரமாகக் கணக்கிடப்படுகிறது. இதை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா?
மேலும் காலம் அல்லது நேரம் என்பது இரண்டு வகைகளாகக் குறிப்பிடப்படுகின்றது. ஒன்று காலத்தால் கணிக்கப்படுகின்ற நேரம். அடுத்தது உள்ளத்தால் கணிக்கப்படுகின்ற நேரம். எடுத்துக்காட்டாக அறுபது வயது ஆன ஒருவர் இருபத்தைந்து வயது இளைஞனாக என்னை நான் உணருகிறேன் என்று கூறினால், அவரது மனநிலை அவ்வளவு இளமையாக அவருக்குச் செயல்படுகிறது என்று பொருள். இவற்றில் காலம் எங்கே இருக்கிறது? கடந்து வந்த வாழ்க்கையா? மனமா? மனித அளவுகளில் காலம் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் காலத்திற்குள் அகப்படாதது பிரம்மம். அது எல்லைகள் அற்றது. அளவுகள் அற்றது. காலம் என்பது விரிக்கப்பட்ட பாதை. இதில் ‘இப்பொழுது’ என்பது மட்டுமே உண்மை. இந்த இப்பொழுது என்ற கணத்தில் தான் விழிப்புணர்வு முழுமையாக இருக்கிறது.
Article by Pattambi Iyer