கேள்வி : மறு ஜென்மம் என்பது எப்படி உண்மையாகும் ? அது ஒரு பித்தலாட்டம். நிரூபிக்க முடியாத மூடநம்பிக்கை.
பதில் : மறு ஜென்மத்தை கிறிஸ்துவர்களும், இஸ்லாமும் நம்புவதில்லை. அவர்களின் புனிதநூல்களின் படி, அந்த பிறவியில் செய்யும் நல்லது அல்லது கெட்டதின்படி அவர்களுக்கு, இறுதி நாளில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ஒருவன் செய்யும் நல்லது அல்லது கெட்டதின்படிதான், இறுதிநாளில் அவனுக்கு சுவர்கமோ, நரகமோ கிடைக்கிறது.
இப்போது நாம் முதலில் இறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா என்பதை பார்த்தாக வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் நல்லது செய்துவிட்டு மற்றவருக்கு தீங்கு செய்பவன் இறைவன் ஆவானா ? அப்படி பாரபட்சம் காட்டுபவனை அனைத்து உயிர்களுக்கும் இறைவன் என்று கொள்ள முடியுமா ? நிச்சயமாய் முடியாது தானே ? இறைவன் அனைவருக்கு சரிசமமானவன் தானே ? யாருக்கேனும் மாற்றுக் கருத்து உள்ளதா ?இப்போது நாம் பிறக்கும் குழந்தைகளை பார்ப்போம். ஒரு குழந்தை ஆரோக்கியமாய் பிறக்கிறது, மற்றொன்று பிறக்கும் போதே நோய்வாய் பட்டு பிறக்கிறது. ஒன்று செல்வந்தனாய் பிறக்கிறது, மற்றதோ தரித்திரத்தில் பிறக்கிறது. ஒன்று அழகாய் பிறக்கிறது, மற்றொன்று அசிங்கமாய் பிறக்கிறது. நாம் இப்பிறவியில் செய்யும் நல்லது கெட்டதிற்கு ஏற்றபடிதான் நமக்கு இறுதி தீர்ப்பில் நியாயம் கிடைக்கும் சரி. ஆனால் நாம் எதுவுமே செய்யாத நமது பிறப்பின் ஆரம்பத்தில், எப்படி இறைவனுக்கு பாரபட்சம் வந்தது ? ஒரு ஓட்டப்பந்தயம் என்று வைத்துக் கொண்டால் கூட அனைவரையும் ஒரே கோட்டிலிருந்து தானே ஓடச் சொல்லுவார்கள் ?இறைவன் அப்பழுக்கற்றவன், இறைவன் நியாயவான், இறைவன் சத்தியத்தின் அடையாளம் என்று நாம் நம்புவோம் என்றால். அவன் நிச்சயமாய் பாரபட்ட்சம் அற்றவன் அல்லவா ? ஒரு உயிருக்கும் மற்ற உயிருக்கும் இடையே பிறக்கும் போதே ஒர வஞ்சனை செய்பவன் இறைவன் ஆக முடியுமா ? ஆப்ரகாமிய மதங்களின் வாதங்கள் இங்கே தவிடு பொடியாவதை நீங்கள் கண்கூடக் காணலாம். அவர்களால் இதைப்பற்றி விளக்கவே முடியாது.ஆக நாம் முன்பு செய்த ஏதோ ஒன்றுக்காகதான் நாம் இவ்வாறு வித்யாசமான உடல்களை அடைகிறோமே தவிர அது இறைவனின் பாரபட்சமான விருப்பமும் அல்ல, அல்லது படைப்பும் அல்ல.
ஹிந்து தர்மம் இதை தெளிவாக சொல்கிறது. நீ செய்யும் கர்ம வினைப்படி உன் ஆத்மாவானது அதற்கு ஏற்ற உடலை அடைகிறது. இது ஒரு பிரபஞ்ச தர்மம். ஆண்மாக்கள் இந்த கர்மபந்தம் என்கிற வினைப்பயனைக்கு ஏற்றவாறே அதற்குரிய யோனிகளில் புகுகிறது. எதை நோக்கி எண்ணங்கள் அதிகமாய் லயிக்கிறதோ, அந்த எண்ணங்களை பூர்த்தி செய்துக்கொள்ளும் உடலை நோக்கியே நம் ஆண்மா பயனிக்கிறது.
உதாரணத்திற்கு காம இச்சையையே சதா சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மனம் கொண்ட ஒருவனின் ஆத்மா, அவ்விதமான் செயலில் சதா ஈடுபடக்கூடிய உடல்களை (நாய், பன்றி) அடைந்து விடுகிறது. உண்பதையும், ருசிப்பதையுமே அதிகமாக புனரும் விருப்பம் உள்ளவர்கள் அதற்குரிய உடல்களை ( ஆடு, மான்) அடைகிறார்கள். ஒவ்வொரு விதமான உயிர்களின் உடலும் ஒவ்வொரு விதமான குணாதிசியங்களை அடிப்படையாகக் கொள்வதை நாம் பார்க்கலாம்.
இறப்பின் போது எவன் என்னை நினைக்கிறானோ அவன் என்னை அடைகிறான் என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். சிலர் அப்படியென்றால், எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, இறக்கும் தருவாயில் இறைவனை நினைத்தால் போதுமே என்று நினைக்கலாம். ஆனால் ஒருவன் தன் வாழ்க்கையில் எதன் மேல் அதிகம் பற்று வைத்துள்ளானோ அதை குறித்துதான் அவன் இறக்கும் தருவாயில் நினைப்பான். சதா சொத்தையும் சுகத்தையும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் இறக்கும் தருவாயில், அந்த சொத்துக்களையும் சுகங்களையும், நினைத்துக்கொண்டேதான் சாவான். ஆனால் இறைவன் மேல் எப்போதும் எண்ணத்தை செலுத்தும் மனதை கொண்டவன், இறக்கும் போதும் அவனையே நினைவு கொள்கிறான் அவனையே அடைகிறான்.
Comments
comments