யேசு அழைக்கிறார் !!தொலைப்பேசியை எடுத்தவுடன் தெரிந்துவிட்டது. மீண்டும் யேசு அழைத்துவிட்டார் ! அதே குரல்,எனக்கு இந்த முறையும் பதற்றம் குறையவில்லை.
ஐயா வணக்கம் என்றேன், பின்னர் நமஸ்தே, நமஸ்காரம் என்றெல்லாம் இடைவெளி இல்லாமல் சொல்லிவிட்டேன்.
யேசு மௌனமாக இருந்தார்.
நான் சுதாரித்துக் கொண்டு “அல்லேலோயா” என்றேன்.
யேசு பெரிதாக சிரித்தார். “வணக்கம் என்று சொல்லுங்கள் அதுவே போதும், எனக்கு எம்மொழியும் சம்மதம்” என்றார்.
“மை லார்ட், நீங்கள் கால் இல்லாதவர்க்கு கால் கொடுப்பதாக சொல்கிறார்கள், ஆனால் எனக்கு ஒரு மிஸ்டு கால் கூட கொடுப்பதில்லையே ? பேசி நீண்ட நாள் ஆகிவிட்டதே” என்றேன்.
“நான் நல்ல மனிதர்கள் மூலமாக உங்களுடன் பேசிக் கொண்டுதானே இருக்கிறேன்” என்றார் ஜீசஸ்.
“யார் லார்ட் ? பால் தினகரனா அல்லது சாது செல்லப்பாவா” என்று கேட்டேன்.
“யார் இவர்கள் என்று கேட்டார் யேசு ?”
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. “என்ன லார்ட் இப்படி சொல்கிறீர்கள். பால் தினகரன் நீங்கள் அழைப்பதாக சொல்லி பெரிய பெரிய கூட்டம் எல்லாம் நடத்துகிறார். கண்ணை மூடிக் கொண்டு அழுகிறார். முகபாவங்களை பலவாறு மாற்றி உங்களோடு பேசுவது போல் செய்கிறார். பின்னர் உங்கள் மூலமாக பல அற்புதங்களை நிகழ்த்துவதாய் சொல்கிறார்”
யேசு சற்று அமைதி காத்தார்….. “ஓ அந்த குடிசை வாசியா ? நேற்று கூட ஒரு தெருவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய்காக வருத்தப்பட்டு பிரார்த்தனை செய்தாரே அவரா ?” என்றார்.
“என்ன லார்ட் …. குடிசை வாசியா ? அவருக்கு இன்றைய தேதியில் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது ஐயா. ஊழியம் ஊழியம் என்று ஊரையே விலைக்கு வாங்கி விட்டார்” என்றேன்.
யேசுநாதர் யோசிப்பது தெரிந்தது. “ஐயா சாது செல்லப்பாவை உங்களுக்கு நிச்சயம் தெரியும்” என்றேன்.
“யார் அந்த சாது ? நான் காஷ்மீர் சென்று, யோக கலைகள் பயின்ற இமய மலையிலிருந்து வருகிறாரா ?” என்றார்.
“இமயமலையில் இருந்து வருகின்ற சாது இல்லை ஐயா இவர், எஞ்சல் டீவியில் வரும் ஃப்ராடு” என்றேன். “உங்களை நன்றாக தெரியும் என்கிறார். பல கதைகளை சொல்கிறார். உங்கள் சார்பாக பிரார்த்தனை எல்லாம் செய்கிறார்” என்றேன்.
யேசு சிரித்தார். “நல்லவர்களின் அருகில் தானே நான் இருக்கிறேன். நயவஞ்சகர்களை எனக்கு எப்படி தெரியும் ?” என்றார்.
“லார்ட் அப்படியென்றால் இந்த கோட்டு சூட் போட்டுக் கொண்டு பல பெயர்களில் வரும் யாரையும் உங்களுக்கு தெரியாதா என்று கேட்டேன். நவ ரசங்களையும் தங்கள் முகத்தில் கொண்டு வந்து பேசும் இந்த இவான்ஜிலிஸ்டுகளை உங்களுக்கு தெரியாதா ?”
யேசு புன்னகை பூப்பது போல் என் மனதில் தோன்றியது.
“நான் யார் என்பதை அறியாத இந்த மூடர்களை எனக்கு மட்டும் எப்படி தெரியும் ? யார் என்னை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், எந்த சுயநலமும் இல்லாமல் அடைய நினைக்கிறார்களோ, அவர்களோடு மட்டுமே நான் இருக்கிறேன்” என்றார்.
அவர் தொலைப்பேசி துண்டிக்கப்பட்டாலும், பின்னனியில் இருந்த அந்த மெல்லிய புல்லாங்குழல் சப்தம் மட்டும் என் நினைவுகளில் சஞ்சரித்து கொண்டிருந்தது. “கூடவே அனைத்து தேவதைகளில் வழியாக அருள் புரிவது நானே” என்கிற கீதையின் வாக்கியமும்.