கேள்வி: ஹிந்து வேதங்களும், உபநிடந்தங்களும் பல விஞ்ஞாண விடயங்களை கொண்டது என்று சொல்கிறீர்களே ? உங்கள் ரிஷிகளும், முனிவர்களும், அதை கண்டு பிடித்தார், இதை கண்டுப் பிடித்தார் என்கிறீர்களே… அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உதாரணத்திற்கு விமான சாஸ்திரத்தை “பரத்வாஜர்” கண்டுப்பிடித்தார் என்று சொல்கிறீர்கள், பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி செய்யப் பட்டதற்கான ஆய்வு கூடங்களோ, விஞ்ஞான உபகரணங்களோ இல்லையே ? எதை வைத்து இப்படி ஆரிய கட்டுக்கதைகளை பரப்புகிறீர்கள் ?
பதில்: பண்டைய பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சொல்வதற்கு முன், அறிவியல் என்றால் என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மாற்றமே மாறாதது என்பதை அனைவரும் அறிவர். அறிவியல் மட்டும் மாறுவதில்லை. அறிவியல் என்றால் என்ன எனும் விளக்கமும் மாறி வருகிறது.ஆல்பர்ட் ஐன்ஸ்டியன் வருவதற்கு முன் விஞ்ஞானம் பெரிதாய் நம்பி கொண்டிருந்தது என்ன வென்றால். தூரமும், காலமும் நிலையானது என்று. ஒரு நூற்றுப்பத்து வருடங்கள் முன்பு கூட விஞ்ஞானிகள் நியூட்டன் மற்றும் களிலியோவின் விதிகளையே ஆதாரமாய் கொண்டிருந்தார்கள். மின்காந்த அலைகளை குறித்த அவரின் ஆராய்சியில் அவருக்கு அதற்கு முன்பிருந்த நியூட்டனின் சில ஆதார நிலைகள் திருப்தி அளிக்கவில்லை. காலமும், தூரமும் எப்படி நிலையானது என்று அறிவியல் அன்று விளக்கியதை குறித்து அவர் ஆழமாக யோசித்தார். அதில் திருப்தி அடையாத ஐன்ஸ்டியன் அதை குறித்து ஆழமான சிந்தனைகளில் பல மாதங்களை செலவழித்தார். அவ்விதம் ஆழமாய் அதைகுறித்து அவர் சிந்தித்து வந்தபோது, அவரின் மனதில் ஏன் ஒளியின் வேகம் நிலையாக இருக்க கூடாது என்ற உள்ளுணர்வு எழும்பியது. அதை குறித்து தன்னுடைய கணித மற்றும் மின்காந்த விதிகளை வைத்துக் கொண்டு அவர் மறுபரிசீலனை செய்த போது அது சரியாக வந்தது. “E = mc2 “என்கிற அந்த விதியை அவர் உலகத்திற்கும், உலக விஞ்ஞானிகளுக்கும் சமர்ப்பித்தார். அது உலகத்தையே புரட்டி போட்டது. அன்றைய பெரும் விஞ்ஞானிகள் பலர் அதற்கு ஆட்சேபித்தனர், “இதை எப்படி கண்டுபிடித்தாய் ?” என்று ஐன்ஸ்டினை கேட்டனர். ஐன்ஸ்டியன் சொன்னார் “நான் எப்படி கண்டுபிடித்தேன் என்பது உங்களுக்கு தேவையில்லை, அது செயல்படுகிறதா இல்லையா என்பது தான் முக்கியம், அதை செயல்படுத்தி பாருங்கள் அது செயல்படும்” என்றார்.
ஐன்ஸ்டியன் ஒரு “தியரட்டிக்கல் சைண்டிஸ்ட்”, இத்தகையோர் ஆய்வு கூடங்களில் ஆய்வு செய்வதில்லை, மாறாக தங்கள் ஆழ்மனதில் விடைகளை குறித்து தேடுகிறார்கள். பிரபஞ்சத்தில் மனிதன் அறிந்தது, அறியாதது என எல்லாமே எப்போதுமே இருக்கிறதல்லாவா ? அதை வெளிக் கொணர்வதற்குதான் ஆழமான தேடல் தெவைப் படுகிறது. எப்படி ஒரு ரேடியோவில் உள்ள குழிழை நாம் திருப்பிக் கொண்டே வரும் போது குறிப்பிட்ட அலைவரிசையை கிடைக்கையில் அதற்குரிய தகவல் ஒலிப்பரப்பாகிறதோ, அது போல ஒருவர் தன் ஆழ்மனதில் ஆழமான தேடுதலில் ஈடுபடும் போது விடைகள் கிடைக்கின்றன.
அதைத்தான் ஐன்ஸ்டியன் “உள்ளுணர்வு கொண்ட மனம் அற்புதமான பரிசு, அறிவார்ந்த மனமோ நம்பிக்கைக்குரிய அடிமை” (The intuitive mind is a sacred gift and the rational mind is a faithful servant) என்றார். உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் ஒரு சிறு உள்ளுணர்வால் தான் வெளி வருகிறது என்பார்கள். அதைத்தான் நம் ரிஷிகளும், மகான்களும் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுள் சென்று தங்கள் ஆழ்மனதில் பயனித்து அதன் மூலமாய் பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையானவற்றை உள்வாங்கி நமக்கு தந்தனர்.
எதைநோக்கி ஆழமாய் தியானிக்கிறாயோ, அதையே அடைகிறாய் என்கிறது இராஜ யோகம். அதைத்தான் “வைமானிக சாஸ்திரத்தை” தந்த பாரத்வாஜரும், “ஆர்யபட்டியம்” தந்த ஆர்யபட்டாவும், “அனுத்தத்துவத்தை” தந்த ஆச்சார்யர் கண்ணட் என்பவரும், “ரசவாத சாஸ்திரத்தை” தந்த நாகர்ஜுனாவும், “யோக சாஸ்திரத்தை” தந்த பதஞ்சலியும் செய்தார்கள்.
நம் ஆழ்மனதை விடச் சிறந்த ஆய்வுக்கூடம் இந்த உலகில் ஏது ?
ப்ரபஞ்சத்தில் புதைந்திருக்கும் ஞானச் செல்வங்களை விடச் சிறந்த நூலகம் எது ?
இதை அறியாமல் பிதற்றும் மனநோயாளிகள் இதை புரிந்துக் கொள்வதுதான் எப்போது ?